கடைசி 5 ஓவரில் 85 ரன்கள்.. வெறியாட்டம் ஆடி 6 சிக்ஸ் பறக்கவிட்ட ரஸ்ஸல்.. 206 ரன்கள் குவித்த கேகேஆர்!
கொல்கத்தா: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை விளாசியுள்ளது. கடைசி நேரத்தில் களமிறங்கிய ரஸ்ஸல் 22 பந்துகளில் அரைசதம் விளாசிய நிலையில், கேகேஆர் அணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 85 ரன்களை குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து கேகேஆர் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் கேகேஆர் அணி தரப்பில் சுனில் நரைன் - குர்பாஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் சுனில் நரைன் 2வது ஓவரிலேயே 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பின் குர்பாஸ் - ரஹானே கூட்டணி இணைந்தது. யுதுவீர் வீசிய 4வது ஓவரில் ஒரு சிக்ஸ் 2 பவுண்டரி விளாசப்பட, ஆகாஷ் மத்வால் வீசிய 6வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கேகேஆர் அணி 6 ஓவர்கள் முடிவில் 56 ரன்களை எட்டியது. இதன்பின் ஸ்பின்னர்களை விளாசி தள்ளிய குர்பாஸ், 25 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து ரஹானே - ரகுவன்ஷி கூட்டணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 10 ஓவர்களில் கேகேஆர் அணி 86 ரன்களை எட்டிய நிலையில், ஓவருக்கு ஒரு பவுண்டரி அடிப்பதை வழக்கமாக்கினர். அப்போது ரஹானே 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, உடனடியாக அதிரடி வீரர் ரஸ்ஸல் களம் புகுந்தார். 2 ஓவர்கள் நிதானம் காத்த ரஸ்ஸல், ஆகாஷ் மத்வால் ஓவரில் 4,6,4 என்று விளாசி தள்ளினார்.
தொடர்ந்து ஆர்ச்சர் ஓவரிலும் 6, 4 என்று ரஸ்ஸல் அடிக்க, தீக்சனா வீசிய 18வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட 23 ரன்களை விளாசி தள்ளினார். சிறப்பாக ஆடிய ரஸ்ஸல் 22 பந்துகளில் தனது அரைசதத்தை விளாசினார். பின்னர் ரகுவன்ஷி 44 ரன்களில் ஆட்டமிழக்க, ஃபினிஷிங் பொறுப்பு ரஸ்ஸல் - ரிங்கு சிங் வசம் அளிக்கப்பட்டது.
அதற்கேற்ப கடைசி ஓவரை வீச ஆகாஷ் மத்வால் வந்தார். அந்த ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட் 20 ரன்கள் குவிக்கப்பட்டது. இதன் காரணமாக கேகேஆர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய ரஸ்ஸல் 25 பந்துகளில் 57 ரன்களையும், ரிங்கு சிங் 6 பந்துகளில் 19 ரன்களையும் விளாசி தள்ளினர்.


Click it and Unblock the Notifications