கொல்கத்தா: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் தாம் கடைசிவரை களத்தில் பேட்டிங் ஆடியிருக்க வேண்டும் என்று ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார். சில தப்புக் கணக்குகளை போட்டுவிட்டதாக கூறிய ரியான் பராக், கடைசி 6 ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து கேகேஆர் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அதில் 1 ரன் எடுத்திருந்த நிலையில், 2வது ரன் ஓடும் போதே ஆர்ச்சர் ரன் அவுட்டாகினார். இதன் காரணமாக கேகேஆர் அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்றுள்ளதோடு, புள்ளிப் பட்டியலில் 11 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
ராஜஸ்தான் அணி மீண்டும் கடைசி ஓவரில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பேசுகையில், கடைசி 2 ஓவர்கள் வரை பேட்டிங் விளையாட வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது. ஆனால் எதிர்பாராத வகையில் 18வது ஓவரிலேயே ஆட்டமிழந்துவிட்டேன். அந்த நேரத்தில் நான் தப்பு கணக்கு போட்டுவிட்டேன்.
அதேபோல் பவுலிங்கிலும் கடைசி 6 ஓவர்களை வீச மாற்று வாய்ப்புகளை பார்த்திருக்க வேண்டும். இதில் யாரையும் குற்றம்சாட்ட முடியாது. நான் முன்னின்று போட்டியை முடித்திருக்க வேண்டும். அதேபோல் வேறு ஏதாவது திட்டமிட்டிருக்க வேண்டும். அதேபோல் ரஸ்ஸல் 10 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். ஆனால் அதன்பின் கடைசி சில ஓவர்களில் அதிரடியாக ஆடினார்.
இந்த மைதானத்தில் எளிதாக சிக்ஸ் அடிக்க முடியும். இந்த விக்கெட் கொஞ்சம் வித்தியாசமானது. அதனால் நானே அதிரடியாக விளையாடினேன். நான் களத்தில் இருக்கும் வரை, ராஜஸ்தான் அணி முன்னிலையில் இருந்தது. பேட்டிங்கின் போது எனக்கு நானே, ஒரு தோல்வியடைந்த கேப்டனாக நேர்காணல் கொடுக்க கூடாது என்று நினைத்து கொண்டேன். அதேபோல் ஃபீல்டிங்கிலும் சொதப்பிவிட்டோம். அதனால் களத்தில் அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.