கடைசி 11 இன்னிங்சில் ராகுல் அடித்த ஸ்கோர்..மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றம்..இனியும் பொறுக்க முடியாது
டெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
இதனை அடுத்து இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் விளையாடினார்கள். தொடர்ந்து சொதப்பி வரும் ராகுல் இம்முறை ஏதேனும் ரன் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அதற்கு தகுந்த மாதிரி ராகுல் ஒரு சிக்ஸரும் அடித்தார். இதனால் ராகுல் பழைய பார்ம்க்கு திரும்பி விட்டார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ராகுல் ஏமாற்றம்
ஆனால் வழக்கம் போல் அவர் 20 ரன்களை கூட தாண்டாமல் திரும்பினார். 41 பந்துகளை எதிர் கொண்ட கே.எல். ராகுல் 17 ரன்களில் வெளியேறினார். இதன் மூலம் இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. ராகுல் கடந்த 11 டெஸ்ட் இன்னிங்சில் ஒரே ஒரு முறை தான் அரை சதம் அடித்திருக்கிறார். தொடர்ந்து சொதப்பி வரும் ராகுலுக்கு இவ்வளவு வாய்ப்பு கொடுத்தும் அவர் அதனை பயன்படுத்திக் கொள்ளவில்லை.

கடைசி 11 இன்னிங்ஸ்
கடைசியாக விளையாடிய ராகுலின் 11 இன்னிங்ஸில் ஸ்கோர்களை தற்போது பார்க்கலாம். 23, 50 ,8 ,12, 10, 22 ,23, 10, 2, 20 , 17 ஆகிய ஸ்கோர்களை தான் ராகுல் அடித்திருக்கிறார். 565 பந்துகளை கடந்த 11 இன்னிங்ஸில் எதிர்கொண்ட ராகுல் வெறும் 197 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சராசரியாக 17 ரன்கள் ஆகும். இப்படி தொடர்ந்து சொதப்பி வரும் ஒரு வீரருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் தீவிரமாக எழுந்துள்ளது.

நெருக்கடி
ராகுலை அதிரடியாக நீக்கி விட்டு சுப்மன் கில் அல்லது சர்பிராஸ்கான் ஆகிய திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எப்போதுமே தொடக்க வீரர் நன்றாக விளையாடினால் மட்டுமே மற்ற வீரர்கள் ரன் சேர்க்க ஏதுவாக இருக்கும். ஆனால் இந்திய டெஸ்ட் அணியில் ராகுல் தொடர்ந்து சொதப்பி வருவது நன்றாக விளையாடி வரும் ரோகித் சர்மாவுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

அறிவுறுத்தல்
இதனிடையே கே எல் ராகுல் குறித்து பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் வாக், கே எல் ராகுல் ஒரு சதம் அடித்துவிட்டால் அணியில் நமது இடத்திற்கு ஆபத்து இல்லை என்று நினைப்பதாக குற்றச்சாட்டினார். கே எல் ராகுல் ஃபார்மில் இருக்கும் போது தொடர்ந்து ரன்கள் அடிக்க வேண்டும். ஒரு சதம் அடித்து விட்டு அடுத்த சதத்திற்கு பசியுடன் விளையாட வேண்டும். இல்லை எனில் ராகுலின் இடம் பறிபோய்விடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து ராகுல் மோசமாக விளையாடி வருவதால் அவரை ரஞ்சி கிரிக்கெட்டில் அனுப்பி அதன் பிறகு அணியில் எடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications