
தொடக்கமே சொதப்பல்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர் ஓப்பனிங் வீரர் கே.எல்.ராகுல். இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலுமே கே.எல்.ராகுல் மிகவும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் இந்த போட்டியிலும் அவரின் பதற்றம் தொடர்ந்துக்கொண்டே தான் இருந்தது. முதல் ஓவரில் பர்னல் வீசிய 6 பந்துகளிலுமே ராகுல் ஒரு ரன்னை கூட அடிக்கவில்லை. சில பந்துகளை தொடக்கூட இல்லை.

எதிர்பார்க்காத சம்பவம்
இந்நிலையில் திணறிக்கொண்டிருந்த கே.எல்.ராகுலுக்கு எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது. ஆட்டத்தின் 3வது ஓவரில் பார்னல் வீசிய குட் லெந்த் பந்தை கே.எல்.ராகுல் லெக் சைட்டில் டிஃபண்ட் செய்து ஆட நினைத்தார். ஆனால் திடீரென பேட்டை மீறி உள்ளே வந்த பந்து ராகுலின் தொடைப்பகுதியின் அருகே நன்கு அடித்தது.

திணறிய ராகுல்
மணிக்கு 140+ கிமீ வேகத்தில் வந்த பந்து, உயிர்நாடி அருகில் பட்டதால், கதிகலங்கி நின்ற கே.எல்.ராகுல், மைதானத்திலேயே கீழே மண்டியிட்டு, வலி தாங்க முடியாமல் தவித்தார். பின்னர் களத்திற்குள் பிசியோதெரபிஸ்ட்கள் வருகை தந்து ராகுலுக்கு சிகிச்சை செய்துவிட்டு, சென்றனர். அதன்பின்னர் வழக்கம் போல அவர் பேட்டிங்கிற்கு வந்தார்.

மீண்டும் ஏமாற்றம்
கண்டத்தில் இருந்து தப்பித்து வந்த கே.எல்.ராகுலுக்கு அதன் பிறகும் நேரம் சரியாக அமையவில்லை. 14 பந்துகளை சந்தித்த அவர் ஒரே ஒரு சிக்ஸருடன் 15 ரன்களை அடித்துவிட்டு வெளியேறினார். தொடர்ச்சியாக 3 போட்டிகளிலும் சொதப்பியுள்ளதால் கே.எல்.ராகுலை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications