மொஹாலி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கீப்பரும் கேப்டனுமான கே எல் ராகுல் ஒரு அழகான ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர்.

இந்தியாவின் அசத்தலான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் மிச்சல் மார்ஷ் நான்கு ரன்களில் வெளியேறினார். இதனை அடுத்து டேவிட் வார்னரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை அமைத்தனர். அப்போது டேவிட் வார்னர் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சை தூக்கி அடித்து கேட்ச் ஆனார். அதேபோன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித் 41 ரன்களில் எட்ஜ் ஆகி போல்ட் ஆனார்.
இதனால் ஆஸ்திரேலியா அணி 112 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதை அடுத்து மார்னஸ் லாபஸ்சேன் மற்றும் கேமிரான் கிரீன் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். இந்த ஜோடியை இந்திய அணி எவ்வளவு விரைவாக உடைக்கிறதோ அந்த அளவுக்கு வெற்றி பிரகாசமாக இருக்கும். இந்த நிலையில் ஆட்டத்தின் 22.1 வது ஓவரில் இந்திய அணிக்கு கிடைத்த தங்கமான வாய்ப்பை கேஎல் ராகுல் தவறவிட்டார்.
அதாவது ஜடேஜா ஓவரில் பில்டர் கையிலே பந்தை அடித்து விட்டு ரன் ஓடும் முயற்சியில் லாபஸ்சேன் ஈடுபட்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சூரியகுமார் யாதவ் பந்தை எடுத்து தூக்கி கே எல் ராகுலிடம் எறிந்தார். இதனை எதிர்பார்க்காத மார்னஸ் லாபஸ்சேன், பாதி தூரம் கடந்துவிட்டார்.இதனால் நாம் ரன் அவுட் ஆகப் போகிறோம் என அங்கே நின்று கொண்டிருந்தபோது கே எல் ராகுல் பந்தை பிடித்து அடிப்பதற்கு பதில் அதனைத் தவற விட பந்து அவரை தாண்டி சென்று விட்டது.
இதனால் நமக்கு இன்னொரு life கிடைத்துவிட்டது என்பதை உணர்ந்த லாபஸ்சேன் மீண்டும் கிரீஸ்க்குள் ஓடி வந்து விட்டார். இந்த வாய்ப்பை மட்டும் இந்தியா சரியாக பயன்படுத்தி இருந்தால் மார்னஸ் லாபஸ்சேன் 11 ரன்னில் ஆட்டமிழக்க வைத்திருக்கலாம். ஏற்கனவே வார்னர் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஒரு கேட்சை மிஸ் செய்ய அவர் அரை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.