பெங்களூர் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் கே எல் ராகுல் முக்கியமான வீரராக இருந்தார். இந்திய அணி விளையாடிய ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் இடம்பெற்றிருந்த ராகுல் பேட்டிங் வரிசையில் தொடக்க வீரராகவும், மூன்றாவது வீரராகவும் களமிறங்கினார்.
இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் கே எல் ராகுல் 276 ரன்கள் அடித்திருந்தார். இந்த தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு பிறகு அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற பெயரை ராகுல் பெற்றிருந்தார். எனினும் ராகுல் இந்த தொடரில் சிறப்பாக ஆரம்பித்தாலும் இறுதி கட்டத்தில் தடுமாறினார்.

அது மட்டும் இல்லாமல் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியதால் கே எல் ராகுலுக்கு உடல் சோர்வு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் கர்நாடகா அணி விளையாடும் காலில் சுற்று ஆட்டத்திலிருந்து ராகுல் விலகி இருக்கிறார்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் ராகுல் இந்த தொடரில் கண்டிப்பாக இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உடல் சோர்வு காரணமாக தமக்கு ஓய்வு வேண்டும் என்பதால் இந்த போட்டியில் அவர் இடம் பெறவில்லை. இதே போன்று இங்கிலாந்து எதிரான டி20 தொடரிலும் ராகுல் சேர்க்கப்பட மாட்டார்.
இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ராகுல் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ராகுல் நடுவரிசையில் களம் இறங்க கூடும். இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்பு ரஞ்சி கோப்பையில் இரண்டாவது ஆட்டம் ஜனவரி 23ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது.
இதில் ராகுல் விளையாடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பிய அனைத்து வீரர்களும் ரஞ்சி கோப்பையில் விளையாட வேண்டும் என்று கம்பீர் கூறியதால் ராகுல் என்ன செய்யப் போகிறார் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இந்த சூழலில் ஆஸ்திரேலிய தொடரிலிருந்து திரும்பிய பிரசித் கிருஷ்ணா,டேவுதட் படிக்கல் ஆகியோர் விஜய் ஹசாரே கோப்பை காலிறுதி சுற்றில் களமிறங்கும் கர்நாடக அணியில் இடம்பெறப் போகிறார்கள். வரும் சனிக்கிழமை கர்நாடகா அணி பரோடாவை காலிறுதியில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.