மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கவுகாத்தி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல். ராகுல் செயல்படாதது குறித்து முன்னாள் இந்திய தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம்,பெரும் அதிருப்தி தெரிவித்தார். மூத்த பேட்ஸ்மேனான ராகுல் பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்தாலும், தனது முழு திறமையையும் இன்னும் வெளிப்படுத்தவில்லை என்று அவர் விமர்சித்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் முடிவில், இந்தியா 2-0 என்ற தொடர் தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளது. 549 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்தி, இந்திய அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் அவுட் ஆகி இருந்தனர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களிலும், ராகுல் ஆறு ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இது தொடர்பாக பேசிய சபா கரீம், "அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான கே.எல். ராகுலின் இந்த செயல்பாடு ஏமாற்றமளிக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா நிலைத்து நிற்க வேண்டியது மிக முக்கியம். கே.எல். ராகுல் களத்தில் நிலைத்திருக்க வேண்டியது அவசியம். அவருக்கு போதுமான திறமையும் அனுபவமும் உள்ளது. இதுபோன்ற ஆடுகளங்களில் அவர் முன்பு விளையாடி நல்ல ரன்களை எடுத்துள்ளார்" என்றார்.
"ஏனோ தெரியவில்லை, கே.எல். ராகுலை நம்பும்போது, அவர் ஏமாற்றுகிறார். விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா டெஸ்ட் அணியில் இருந்து வெளியேறிய பிறகு, கே.எல். ராகுல் தான் சிறப்பாக செயல்பட்டு, அணியில் சிறந்த பேட்ஸ்மேனாக பொறுப்பேற்பார் என்று நான் உண்மையிலேயே நம்பினேன். துரதிர்ஷ்டவசமாக, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா டெஸ்ட் அணியில் இருந்தபோது எப்படி ராகுலின் ஸ்கோர்கள் நிலையற்றதாக இருந்ததோ, இப்போதும் அப்படியே உள்ளன.
எனவே, ஒரு நிலையற்ற பேட்டராக ராகுல் உள்ளார். அவரை இன்னும் நம்ப முடியவில்லை. முக்கியமான நேரத்தில், அவர் காலை வாரி விடுகிறார்." என்று கரீம் விளக்கினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் தொடரில், ராகுல் நான்கு இன்னிங்ஸ்களில் 17 சராசரியுடன் 68 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார்.
கவுகாத்தியில் நான்காம் நாள் ஆட்டத்தில் சைமன் ஹார்மர் வீசிய பந்தில் ராகுல் க்ளீன் போல்ட் ஆனார். ஆனால், இந்திய தொடக்க வீரர் மோசமான ஷாட்டை விளையாடி பந்துவீச்சாளருக்கு உதவியதாக கரீம் கருத்து தெரிவித்தார். கவுகாத்தியில் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், சாய் சுதர்சன் இரண்டு ரன்களிலும், குல்தீப் யாதவ் நான்கு ரன்களிலும் களத்தில் இருந்தனர். வெற்றி வாய்ப்பு இல்லையென்றாலும், போட்டியை டிரா செய்வதன் மூலம் இந்திய அணி தங்கள் மரியாதையை காப்பாற்றிக்கொள்ள முடியும்.