Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் இன்னிங்சில் 192 ரன்கள் முன்னிலை பெற்றது இந்தியா! 2வது இன்னிங்சிலும் இலங்கை திணறல்

கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் ஷிகர் தவான் மற்றும் கேப்டன் கோஹ்லி ஆகியோரின் சதத்தால் இந்திய அணி 375 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இலங்கையைவிட இந்திய அணி 192 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு நடுவேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம், காலே நகரிலுள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

Kohli-Dhawan going strong against Srilanka

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆனால் இந்திய பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாத அந்த அணி 183 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் அஸ்வின் 46 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அமித் மிஸ்ரா 2, இஷாந்த் ஷர்மா மற்றும் வருண் ஆரோன் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தியா தனது முதல் இன்னிங்சை நேற்றே தொடங்கியது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 7 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ரோகித் ஷர்மா 9 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

ஆனால் ஷிகர் தவான் மற்றும் கேப்டன் கோஹ்லி இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டு பொறுப்புடன் ஆடினர். சிறப்பாக ஆடிய தவான், இன்று சதம் கடந்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து இலங்கையைவிட 44 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

தவானுக்கு இது 4வது டெஸ்ட் சதமாகும். உணவு இடைவேளைக்கு பிறகு சிறிது நேரத்தில் கோஹ்லி சதம் கடந்தார். டெஸ்ட் அரங்கில் அவருக்கு இது 11வது சதம் ஆகும். இதில் 8 சதங்கள் வெளிநாட்டு மண்ணில் விளாசப்பட்டவை.

இருப்பினும், 103 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குஷால் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில், கோஹ்லி அவுட் ஆனார். பின்னர் வந்த ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் குஷால் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதன்பிறகு விக்கெட்டுகள் சீரான இடைவேளையில் சரிந்தன.

இந்திய அணி 375 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. குஷால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக தவான் 134 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். டோணியின் ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளுக்கான விக்கெட் கீப்பர் பொறுப்பை ஏற்றுள்ள, விருத்திமான் சாஹா, தனது பொறுப்பை உணர்ந்து 60 ரன்கள் அடித்தார்.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 192 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2வது இன்னிங்சை இலங்கை தொடங்கியது. ஆனால், அந்த அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சியளித்தார் அந்த ஓவரை வீசிய சுழல்பந்து வீச்சாளரான, அஸ்வின். இலங்கையின் இடது கை பேட்ஸ்மேன் கருணாரத்னே, 5 பந்துகளை சந்தித்த நிலையில், அஸ்வின் வீசிய கேரம் வகை பந்தை கணிக்க தவறி கிளீன் பௌல்ட் ஆகி ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார்.

2வது ஓவரையும் ஸ்பின்னரான அமித் மிஸ்ராவுக்கு கொடுத்தார் கேப்டன் கோஹ்லி. அந்த ஓவரின் கடைசி பந்தில் மற்றொரு தொடக்க வீரரான குஷால் சில்வா பௌல்ட் ஆகி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஆப்-ஸ்பின்னரான அஸ்வின் கேரம் வகையில் லெக் ஸ்பின் வீசி பேட்ஸ்மேனை பௌல்ட் செய்ததை போல, லெக் ஸ்பின்னரான மிஸ்ரா, கூக்ளி முறையில், ஆப்-பிரேக் பந்தை வீசி குஷாலை அகற்றினார்.

3வது ஓவரை ஹர்பஜன் சிங்கும், 4வது ஓவரை அஸ்வினும் வீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தந்தபோதும் மேற்கொண்டு விக்கெட் விழவில்லை. அதற்குள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து, 5 ரன்கள் எடுத்துள்ளது. குமார் சங்ககாரா, தமிக்கா பிரசாத் முறையே, 1 மற்றும் 3 ரன்களுடன் களத்திலுள்ளனர். நாளை 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Story first published: Thursday, August 13, 2015, 17:53 [IST]
Other articles published on Aug 13, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+