இந்திய அணியின் குலதெய்வம் ரேஞ்சுக்கு உயர்ந்த குல்தீப் யாதவ்!
Recommended Video

மான்செஸ்டர்: இந்திய அணியின் முக்கிய வீரராக குல்தீப் யாதவ் உயர்ந்துள்ளதாக கேப்டன் விராத் கோஹ்லி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கான மூலகாரணம் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசியதே ஆகும். ராகுல் சிறப்பாக விளையாடி 101 ரன்களை குவித்தது மற்றுமொரு காரணம் என்றால் மிகையில்லை.
ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட குல்தீப் யாதவ், சிறப்பாக பந்துவீசி 24 ரன்களை கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். டி20 போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சு இதுவேயாகும். இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. அதற்கான காரணம் குல்தீப் யாதவின் சிறப்பான கூக்லி பந்துவீச்சேயாகும். ஒரு கட்டத்தில் அவர் 4 பந்துகளில் 3 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து அணியை நிலைகுலைய செய்தார்.அதிலிருந்து இங்கிலாந்து அணியால் மீளவே இயலவில்லை.

சிறப்பான பந்து வீச்சு
போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி கூறியதாவது: இங்கிலாந்து தொடரில் அபாயகரமான பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் பெரும்பங்கு வகிப்பார். எத்தகைய ஆடுகளத்திலும் யாதவ் சிறப்பாக பந்துவீசுவார். ஆடுகளத்தில் பந்து சுழல ஆரம்பித்தால், யாதவ் மிகவும் அபாயகரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி எதிரணியை வீழ்த்துவார். அவரது பந்தை கணித்து ஆடுவது கடினம். இவரைப்போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் கோஹ்லி.

தொடர்ந்து வீசுவேன்
தனது பந்து வீச்சு குறித்து குல்தீப் யாதவ் கூறுகையில், எனக்கு இதுவே முதலாவது இங்கிலாந்து தொடர். இங்கிருக்கும் சூழல், எனக்கு சொந்த ஆடுகளத்தில் விளையாடுவது போல உணர்ந்தேன். ஆடுகளம் உலர்ந்த நிலையில் இருந்ததால் பந்து நன்றாக திரும்பும் என்று நம்பினேன். சரியான லென்த்தில் வீசி இங்கிலாந்து வீரர்களை வீழ்த்தினேன். எதிர்வரும் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் தரமான வீரர்கள் என்றார் குல்தீப்.

இயான் மோர்கன் பாராட்டு
இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில், குல்தீப் ஒரு சிறந்த பந்துவீச்சாளர். இந்த தொடர் முழுவதும் அவர் எங்களுக்கு அச்சுறுத்தலாகவே இருப்பார். எதிர்வரும் போட்டிகளில் அவருக்கெதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். அவர் நான்கு பந்துகளில் 3 விக்கெட் வீழ்த்தினார். அவர் சிறப்பாக பந்துவீசினார். ஆடுகளத்தில் நீண்ட நேரம் விளையாடும்போது நாம் பந்தை கவனித்து சிறப்பாக விளையாட முடியும். பட்லர் சுழல் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்கிறார். இதுபோன்ற பந்துவீச்சை வலைப்பயிற்சியில் சுழல செய்து பயிற்சி செய்வது கடினம் என்றார்.

ராகுலும் அருமை
இப்போட்டியில் ராகுல் அருமையாக விளையாடி 101 ரன்களை குவித்தார். இதுகுறித்து கோஹ்லி கூறும்போது, அவர் தனது ஐபில் போட்டியில் கிடைத்த பார்மை இங்கிலாந்தில் பயன்படுத்துகிறார். இன்னும் நீண்ட தூரம் சிறப்பாக விளையாடுவார். போட்டிகளில் பல நுணுக்கங்களை கையாள்கிறார் என்றார். ராகுல் முன்வரிசையில் சிறப்பாக ஆடும்பட்சத்தில், பின்வரிசையில் வரும் வீரர்கள் பதட்டமின்றி விளையாடி ரன்களை குவித்து அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல முடியும் எனவும் கோஹ்லி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications