அதே இங்கிலாந்து, அதே 197 பந்துகளில், 1௦3 ரன்கள்....2001-ல் சச்சின், 2018-ல் கோஹ்லி.. வார்ர்ரே வாவ்
நாட்டிங்ஹம் : விராட் கோஹ்லி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நேற்று தன் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். இந்தியாவின் இரண்டாவது இன்னிங்க்ஸில் 197 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் அவர்.
தற்போது இது குறித்த சுவாரஸ்ய செய்தி ஒன்று தெரிய வந்துள்ளது. சச்சின் கடந்த 2001ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இதே 1௦3 ரன்கள் எடுத்துள்ளார். அதுவும் இதே 197 பந்துகளில்.
இந்த ஒற்றுமை கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்கள்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. இது வரை நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 0-2 என பின் தங்கி உள்ளது.
தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைக்க மூன்றாவது போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது இந்தியா. முதல் இரண்டு போட்டிகளில் கோஹ்லி தவிர அனைத்து பேட்ஸ்மேன்களும் தடுமாறி வந்தனர். ஆனால், மூன்றாவது போட்டியில் சுதாரித்த அனைத்து பேட்ஸ்மேன்களும் நன்றாக ரன் குவித்தனர்.
முதல் இன்னிங்க்ஸில் கோஹ்லி 97 ரன்கள் அடித்து சதம் அடிக்கும் வாய்ப்பை மூன்று ரன்களில் தவற விட்டார். எனினும், இரண்டாவது இன்னிங்க்ஸில் சதம் அடித்தார். 197 பந்துகளில், 103 ரன்கள் குவித்து தன் 23வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் வாழ்த்துச் செய்திகள் குவிய ஆரம்பித்தது. அப்போது, கோஹ்லியும், சச்சினும் 103 ரன்களை, 197 பந்துகளில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ள செய்தி பகிரப்பட்டது.
சச்சின் 2001ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்க்ஸில் 197 பந்துகளில் 103 ரன்கள் அடித்த செய்தியோடு, கோஹ்லி நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக அடித்த சதத்தை ஒப்பிட்டு இருந்த இந்த செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் தலைசிறந்த இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் இடையே உள்ள இந்த ஒற்றுமை வியப்பான ஒன்றுதான்.


Click it and Unblock the Notifications