மொஹாலி: விராத் கோஹ்லி தற்போது ஒரு நாள் போட்டிகளில் 4வது இடத்தில் இறங்குகிறார். ஆனால் அவர் 3வது இடத்தில் இறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
இங்கிலா்து தொடரில் சொதப்பிய விராத் கோஹ்லி தற்போது இலங்கை தொடரில் சிறப்பாக ஆடி வருகிறார். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலும் கூட அவர் நன்றாகவே ஆடினார்.

இந்த நிலையில் கோஹ்லியின் ஆர்டரை மாற்ற வேண்டும். மாற்றினால் அவருக்கும், அணிக்கும் நல்லது என்று ஸ்ரீகாந்த் ஆலோசனை கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில்,இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்தாக கோஹ்லி உள்ளார். 2009 ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியின் போது நான் அவர் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்தேன். அவரது ஆட்டத்தில் தற்போது நல்ல முதிர்ச்சி காணப்படுகிறது. தனது ஆட்டத்தால் அவர் பெருமைப்பட வைத்து உள்ளார்.
கோஹ்லி சமீபத்தில் குறைந்த ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்னை எடுத்து ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்து உள்ளார். இது அவருக்கு மட்டும் பெருமை அல்ல. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்குமே பெருமை அளிப்பதாகும். அதே நேரத்தில் ரிச்சர்ட்சின் வேகத்துடன் ஒப்பிட முடியாது. அவர் எப்போதுமே ஒருநாள் போட்டியில் அதிரடி மன்னர் ஆவார்.
அடுத்த 4 மாதம் கோஹ்லிக்கு சோதனைக் காலம். ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார். அங்கு பிட்சுக்கள் கடுமையாக இருக்கும். பந்துகள் அதிகமாக பவுன்ஸ் ஆகும். இதனால் அவர் 3 வது வீரராக களம் இறங்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார் ஸ்ரீகாந்த்.