பாட்ஷாவா இல்லை ஆண்டனியா... கோஹ்லியா, ஆண்டர்சனா.. ஜெயிக்கப் போவது யாரு!?
எட்பாஸ்டன்: இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி என்பது கோஹ்லி, ஆண்டர்சன் இடையிலான மோதலாகவே பார்க்கப்படும் நிலை உள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிவடைந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்கவிருக்கிறது.

இந்த போட்டி இரு அணிகளுக்கிடையேயான போட்டியாக மட்டுமில்லாமல் உலகின் தலை சிறந்த இரு வீரர்களுக்கிடையேயான போட்டியாகவும் பார்க்கப்படுகிறது. உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி மற்றும் மிக சிறந்த வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் ஆகியோரே அவ்விருவர்.
இந்திய அணி கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது அவர் அடித்த மொத்த ரன்கள் 134 ஆகும். அதாவது 10 இன்னிங்ஸ்களில் 13.40 என்ற சராசரியில் அவர் அப்போது ரன்களை எடுத்தார். அவரது கிரிக்கெட் வாழ்வின் மிக மோசமான வெளிநாட்டு தொடராகவும் அமைந்தது. அப்போட்டி தொடரில் அவர் நான்கு முறை ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆண்டர்சன் அத்தொடரில் கோஹ்லிக்கு 50 பந்துகளை வீசி அவரை நான்கு முறை ஆட்டமிழக்கச்செய்தார். பெரும்பாலும் அவர் ஆப் சைடுக்கு வெளியே செல்லும் பந்தை எட்ஜ் செய்து அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதன் பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளில் கோஹ்லி தன்னை உலகத்தரம் வாய்த்த பேட்ஸ்மேன் ஆக மாற்றிக்கொண்டார். அவரது தற்போதைய சராசரி 53.40 ஆகும். அதன் பின்னர் இந்திய அணி ஆசியா கண்டத்திற்கு வெளியே மூன்று நாடுகளில் டெஸ்ட் தொடரை ஆடியுள்ளது .அனைத்திலும் விராட் கோஹ்லியே அதிக ரன்கள் குவித்த வீரர் ஆவார். இங்கிலாந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவர் 5 போட்டிகளில் 655 ரன்களை குவித்தார். அப்போது அவர் ஒருமுறை கூட ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட் ஆகவில்லை என்பது தனிச்சிறப்பு.
மற்றொரு முனையில் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய ஐந்தாவது பந்துவீச்சாளர். நான்காமிடத்தில் உள்ள மெக்ராத்தை மிஞ்ச அவருக்கு இன்னும் 23 விக்கெட்களே தேவை. இதுவரை அவர் 138 போட்டிகளில் 540 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவர் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணிக்கெதிரான 12 போட்டிகளில் 60 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். சராசரியாக ஒரு போட்டிக்கு 5 விக்கெட்கள் வீதம் அவர் வீழ்த்தியுள்ளார். மேலும் அவர் 2017ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 16 டெஸ்ட் போட்டிகளில் 73 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவர் இந்திய அணிக்கு பெரும் சிம்ம சொப்பனமாக இருப்பார்.
இருவரில் வெற்றி பெறப்போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Story first published: Tuesday, July 31, 2018, 16:23 [IST]
Other articles published on Jul 31, 2018


Click it and Unblock the Notifications