Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரித்திரம் படைத்த இந்தியா.. மகளிர் உலகக்கோப்பை செஸ் பைனலில் மோதும் கோனேரு ஹம்பி - திவ்யா தேஷ்முக்!

சென்னை: இந்திய செஸ் வரலாற்றில் முதன்முறையாக, FIDE மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இரண்டு இந்திய வீராங்கனைகள் மோதவிருக்கின்றனர். அனுபவ வீராங்கனை கோனேரு ஹம்பியும், இளம் புயல் திவ்யா தேஷ்முக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

ஜார்ஜியாவில் நடைபெற்ற விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், சீனாவின் லெய் டிங்ஜியை டைபிரேக்கரில் வீழ்த்தி கோனேரு ஹம்பி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம், ஹம்பி மற்றும் திவ்யா ஆகிய இருவரும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மதிப்புமிக்க கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இது இந்திய செஸ் விளையாட்டுக்கு கிடைத்த இரட்டை வெற்றியாகும்.

இந்த இறுதிப் போட்டி, ஒரு தலைமுறை யுத்தம் என்றே வர்ணிக்கப்படுகிறது. 38 வயதான கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பி, 19 வயதே ஆன இளம் புயல் திவ்யா தேஷ்முக்கை எதிர்கொள்கிறார். திவ்யா இந்த தொடரில்தான் தனது முதல் கிராண்ட்மாஸ்டர் நார்மை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Koneru Humpy vs Divya Deshmukh Historic All-Indian Final at FIDE Women s World Cup 2025

இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், கோனேரு ஹம்பியின் அனுபவத்தையும், மன உறுதியையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். "மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த ஹம்பி மற்றும் லெய் டிங்ஜிக்கு இடையேயான டைபிரேக்கர் போட்டி, நரம்புகளைத் தெறிக்க வைக்கும் யுத்தமாக இருந்தது. முதல் பின்னடைவுக்குப் பிறகு, ஹம்பி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் போட்டிக்குள் வந்தது அபாரமானது. கடைசி இரண்டு ஆட்டங்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அவரது மனஉறுதியைக் காட்டுகிறது," என்று ஆனந்த் கூறினார்.

அரையிறுதியில் ஹம்பியின் ஆட்டம் அனல் பறந்தது. ஹம்பி மற்றும் லெய் டிங்ஜிக்கு இடையேயான இரண்டு கிளாசிக்கல் ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. இதனால், போட்டி ரேபிட் டைபிரேக்கருக்கு சென்றது. முதல் செட் ரேபிட் ஆட்டங்களும் 1-1 என சமனில் முடிய, போட்டி மேலும் பரபரப்பானது. இரண்டாவது செட் டைபிரேக்கரின் முதல் ஆட்டத்தில், ஹம்பி ஒரு சிறிய தவறு செய்ய, அதை சரியாகப் பயன்படுத்திய லெய் டிங்ஜி வெற்றி பெற்றார். போட்டியில் நீடிக்க ஹம்பி கட்டாயம் வென்றாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஆனால், அடுத்த ஆட்டத்தில் வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய ஹம்பி, தனது அசாத்திய அனுபவத்தைக் காட்டினார். நிதானமாகவும், திறமையாகவும் விளையாடி ஆட்டத்தை வென்று ஸ்கோரை சமன் செய்தார். இதனால், போட்டி அதிவேக பிளிட்ஸ் டைபிரேக்கருக்கு சென்றது. இதில் தனது திறமையைக் காட்டிய ஹம்பி, முதல் ஆட்டத்தில் இருந்தே லெய் டிங்ஜிக்கு அழுத்தம் கொடுத்து எளிதாக வென்றார். அடுத்த ஆட்டத்தில் டிரா செய்தாலே போதும் என்ற நிலையில், அந்த ஆட்டத்தையும் வென்று 2-0 என்ற கணக்கில் பிளிட்ஸ் சுற்றை முழுமையாகக் கைப்பற்றி, கம்பீரமாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

கோனேரு ஹம்பி, உலக ரேபிட் சாம்பியன் பட்டம் உட்பட பல பட்டங்களை வென்றிருந்தாலும், உலகக் கோப்பை மட்டும் அவருக்கு எட்டாக்கனியாக இருந்து வந்தது. இப்போது முதல்முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி, அந்த குறையையும் போக்கக் காத்திருக்கிறார். சனிக்கிழமை நடைபெறும் இந்த இறுதிப் போட்டிக்காக ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Story first published: Friday, July 25, 2025, 11:55 [IST]
Other articles published on Jul 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+