“டம்மி டீமுடன் ஜெயித்து விட்டு, தோல்வியை மறைத்து தன் பதவியை..” கம்பீரை வறுத்தெடுத்த ஸ்ரீகாந்த்
மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்ததைத் தொடர்ந்து, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் ஆவேசமாக தெரிவித்துள்ளார். அடுத்து சிறிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று விட்டு கம்பீர் தனது பதவியை தற்காத்துக் கொள்வார் எனவும் அவர் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
தனது யூடியூப் பக்கத்தில் பேசிய ஸ்ரீகாந்த், "தொடர் தோல்விகளுக்கு மத்தியில் இந்தியா எப்போதாவது சாம்பியன்ஸ் டிராபி அல்லது டி20 உலகக் கோப்பையை வென்றால், அதற்கான முழுப் புகழும் கௌதம் கம்பீருக்கு வழங்கப்படும். அப்படியிருக்கும் போது, தற்போது ஏற்பட்டுள்ள தொடர் தோல்விகளுக்கும் கம்பீர் தான் பொறுப்பேற்க வேண்டும். ஒட்டுமொத்த அணி நிர்வாகமும் இதற்குப் பொறுப்பு கூற வேண்டும். ஆனால், இந்தியாவில் இந்தத் தோல்விகள் அனைத்தும் கம்பளத்தின் கீழ் மூடி மறைக்கப்படும்" என்று சாடியுள்ளார்.

மேலும் பேசிய ஸ்ரீகாந்த், "இன்னும் 2 நாட்களில் ஜிம்பாப்வே தொடர் தொடங்க உள்ளது. அதன்பின் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற பலவீனமான அணிகளை இந்தியா எதிர்கொள்கிறது. இவர்களை மிக எளிதாக வீழ்த்திவிட்டு, இந்தியா மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டது என்று அனைவரும் கூறுவார்கள். இதனால் இங்கிலாந்தில் கிடைத்த அவமானகரமான தோல்விகள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டு, கம்பீர் மற்றும் அவரது குழுவினர் தங்களது பதவிகளைத் தற்காத்துக் கொள்வார்கள்" என்று குற்றம் சாட்டினார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணி 387 ரன்கள் குவித்ததற்கு இந்திய பந்துவீச்சாளர்களின் மோசமான ஆட்டமே காரணம் என்று கூறிய ஸ்ரீகாந்த், அணியின் தேர்வு முறையையும் விமர்சித்தார்.
பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், குர்னூர் ப்ரார் போன்ற அனுபவமற்ற பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு லார்ட்ஸில் சொதப்பியுள்ளனர். முகமது ஷமி, முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா மற்றும் குருணால் பாண்டியா போன்ற தகுதியான வீரர்களைப் புறக்கணித்துவிட்டு, நிர்வாகம் தங்களுக்குப் பிடித்தமான வீரர்களை மட்டுமே தேர்வு செய்து வருவதாகவும் ஸ்ரீகாந்த் கடுமையாகக் குமுறியுள்ளார்.


Click it and Unblock the Notifications

