கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர் குல்தீப் யாதவ் அசத்தலான ரெக்கார்டுகளை படைத்திருக்கிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமை குல்தீப்பிற்கு கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் உலகக்கோப்பையில் குல்தீப் யாதவ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். குல்தீப் யாதவ், பந்து வீசும் முறை ஏன் இவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். ஆப் ஸ்பின் ,லெக் ஸ்பின் ஆகியவற்றை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் சீனா மேன் பௌலிங் என்ற ஒரு பந்துவீச்சு ஸ்டைலை நாம் பார்த்திருக்கிறோமா ? இப்படி பந்து வீசக்கூடிய முதல் இந்திய வீரர் என்றால் அது குல்தீப் யாதவ் தான். சீனா மேன் பவுலிங் என்றால் இடது கையில் லெக்ஸ்பின் வீசக்கூடிய திறமையை உடையவர்கள் என அர்த்தம். இடது கையில் லெக் ஸ்பின் வீசும் போது அதை பார்ப்பதற்கு சீனர்கள் பந்து வீசினால் எப்படி இருக்குமோ அதே போல் காட்சியளிக்கும்.
இதனால் தான் இந்த பௌலிங் முறைக்கு சீனா மேன் என்று பெயரிடப்பட்டது. முதலில் குல்தீப் தன்னுடைய ஆரம்ப காலத்தில் வேக பந்துவீச்சாளராக கிரிக்கெட்டை தொடங்கி இருக்கிறார். அப்போது அவருடைய பயிற்சியாளர் தான் நீ வேகபந்துவீச்சை விட சுழற் பந்து வீச்சில் கவனம் செலுத்து அதுதான் உனக்கு கை கொடுக்கும் என்று அறிவுரை வழங்கி இருக்கிறார்.
மேலும் அனைவரும் போல் ஆப் ஸ்பின், லெக் ஸ்பின் என வீசாமல் இடது கையில் லெக் ஸ்பின் வீசக்கூடிய பழக்கத்தை குல்திப் யாதவ் கற்றுக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு அவருக்கு கிரிக்கெட் உலகில் பல உயரத்திற்கு சென்று இருக்கிறார். குறிப்பாக 2014 ஆம் ஆண்டு அண்டர் 19 கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் பங்கேற்று அப்போதே பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

இதன் பிறகு சாகலுடன் இணைந்து குல்தீப் யாதவ் பந்துவீச்சிலும் கூட்டணி அமைத்து விக்கெட்டுகள் வேட்டையாடி இருக்கிறார்கள்.இந்தக் கூட்டணிக்கு தோனி பக்கபலமாக இருந்த நிலையில் அவர் சென்றவுடன் இருவரும் அணியில் இருந்த தங்களுடைய இடத்தை இழந்தார்கள்.எனினும் தற்போது கடும் பயிற்சி மூலம் மீண்டும் வந்திருக்கும் குல்தீப் யாதவ், உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக அதிக வீக்கெட்டுகளை வீழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ரன்களை மட்டும் கட்டுப்படுத்தாமல் விக்கெட்டுகளையும் வீழ்த்தி எதிரணிக்கு ஸ்பீடு பிரேக்கர்களை கொடுப்பதில் குல்தீப் வல்லவர். இதனால் நடக்கக்கூடிய உலகக் கோப்பை தொடரில் குல்தீப் யாத வின் பங்கு மிகப் பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.