கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கடந்த இரண்டு போட்டிகளில் களம் இறங்கி ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.
மேலும் குல்தீப் யாதவ், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த ஆட்டத்தில் குல்தீப் முக்கிய கட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்தார்.

இதை போன்று இலங்கை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கடும் நெருக்கடிகளை சமாளித்த குல்தீப் யாதவ் கடைசி இரண்டு விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். குல்தீப் யாதவ், இடது கையில் லெக்ஸ்பின் வீசக்கூடிய பவுலர். இப்படிப்பட்ட பந்துவீச்சு முறையை சீனா மேன் என்று கூறுவார்கள். காரணம் சீனாவை சேர்ந்தவர்கள் பந்து வீசினால் எப்படி இருக்குமோ அதை போல் இந்தப் பந்துவீச்சு முறை தோன்றும்.
பொதுவாக இந்த முறை பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் எதிர் கொண்டு ரன்கள் அடிப்பது என்பது முடியாத காரியம். இந்த நிலையில் தோனி விக்கெட் கீப்பராக இருந்தபோது குல்தீப் யாதவ், சாகலும் அவருடைய அறிவுரையை கேட்டு விக்கெட் வேட்டைகளில் ஈடுபட்டார்கள். ஆனால் தோனி சென்ற பிறகு குல்தீப் யாதவ், சாகல் ஆகியோர் தங்களது இடத்தை அணியில் இருந்து இழந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் கடின உழைப்பின் மூலம் குல்திப் யாதவ் அபாரமாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை குல்தீப் பெற்றிருக்கிறார்.
80 ஒருநாள் போட்டிகளில் முகமது சமி இந்த மைல் கல்லை எட்டி முதலிடத்தில் இருக்க, 88 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை குல்தீப் வீழ்த்தி இருக்கிறார். ஜாம்பவானான அணில் கும்ப்ளே 106 போட்டிகளில் தான் 150 விக்கெட்டுகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று உலக அளவில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர்கள் பட்டியலில் குல்திப் யாதவ் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார். இவர் தென்னாப்பிரிக்கா வீரர் இம்ரான் தாஹிரை வீழ்த்தி தற்போது 88 போட்டிகளில் இந்த சாதனையை குல்தீப் நிகழ்த்தி இருக்கிறார்.