கயானா : இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 160 ரன்கள் எடுத்து வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இந்த ஜோடி பவர் பிளேவில் 38 ரன்களை மட்டுமே சேர்த்தது.

முதலில் இந்த ஜோடி ரன்களை அடித்தாலும் பின்னர் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி ரன்கள் வேகத்தை அணை போட்டு கட்டுப்படுத்தினர்.இந்த நிலையில் பிராண்டன் கிங் 42 ரன்களிலும் மேயர்ஸ் 25 ரன்களிலும் ஆட்டமிழக்க ஜான்சன் சார்லஸ் 12 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரான் இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடித்து மிரட்டிய நிலையில் அவரை குல்தீப் யாதவ் ஆட்டம் இழக்க வைத்தார். இது ஆட்டத்தில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
சிம்ரன் ஹெட்மர் 9 ரன்களில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணி 17 புள்ளி ஒரு ஓவரில் 123 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனை அடுத்து இறுதியில் கேப்டன் ரோமன் பொவெல் அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார். 3 சிக்ஸர்,ஒரு பவுண்டரி அடுத்து அவர் 19 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.
சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 28 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் பட்டேல் கடந்த ஆட்டத்தில் ஒரு ஓவர் கூட விசாத நிலையில் இன்றைய ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் வீசி 24 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இதேபோன்று முகேஷ் குமார் இரண்டு ஓவர்களில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். ஹர்திக் பாண்டியா 3 ஓவரில் 18 ரன்களும் சாகல் 4 ஓவரில் 33 ரன்களும் கொடுத்தனர். இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் 160 ரன்கள் எட்டினால் இந்த மைதானத்தில் வெற்றிகரமாக துரத்தப்பட்ட இரண்டாவது அதிகபட்ச இலக்கு இதுவாகும்.