“குல்தீப் யாதவுக்கு உடம்பு சரியில்லை ஆனால்..”.. பிசிசிஐ-யின் அறிவிப்பால் ரசிகர்கள் விமர்சனம்
கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டது குறித்துப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது உடல்நிலை தொடர்பாகப் பிசிசிஐ மற்றும் கேப்டன் சுப்மன் கில் வெளியிட்ட முரண்பாடான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.
கொழும்பு டெஸ்ட் போட்டியின் டாஸின் போது பேசிய கேப்டன் சுப்மன் கில், குல்தீப் யாதவுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார். ஆனால், அதே சமயம் போட்டியின் மாற்று வீரர்கள் பட்டியலில் குல்தீப் யாதவின் பெயர் இடம்பெற்றுள்ளது. பிசிசிஐ வெளியிட்ட விளக்கத்திலும் குல்தீப் யாதவுக்கு நோய்த்தொற்று இருப்பதாகவும், ஆனால் அவர் மாற்று வீரராக ஆடலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

விதிமுறைகளின்படி, ஆட்டத்தின் போது ஏதேனும் ஒரு வீரருக்கு மூளை அதிர்ச்சி போன்ற கடுமையான காயம் ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக மாற்று வீரராக மற்றொருவர் களம் இறக்கப்படுவார். இதற்கான பட்டியலை போட்டி தொடங்குவதற்கு முன்பே போட்டி நடுவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்பட்டியலில் குல்தீப் யாதவின் பெயர் இடம்பெற்றிருப்பது, அவர் விளையாடுவதற்குத் தகுதியான உடல்தகுதியுடன் தான் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
ஏனெனில், ஒருவேளை மாற்று வீரராக விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவர் உடனடியாகக் களம் இறங்கி விளையாட வேண்டும். இதனால், குல்தீப் யாதவுக்கு உண்மையில் நோய் தொற்று உள்ளதா அல்லது அவரை அணியில் இருந்து நீக்குவதற்காகப் பிசிசிஐ சாக்குப் போக்கு சொல்கிறதா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே முதல் டெஸ்டில் குல்தீப் யாதவ் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக மட்டுமே பயன்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டார். அவருக்குப் பந்துவீச அதிக ஓவர்கள் வழங்கப்படாதது விமர்சனத்திற்குள்ளானது. மேலும், இப்போட்டிக்கு முன்னதாக நடந்த மூன்று நாள் வலைப் பயிற்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. அணி நிர்வாகம் தன் மீது நம்பிக்கை வைக்காததால் மனமுடைந்தே அவர் பயிற்சியைத் தவிர்த்தார் என்றும், தனக்கு ஓய்வு தேவை என நிர்வாகத்திடம் கூறினார் என்றும் செய்திகள் வெளியாயின. தற்போது பிசிசிஐ-யின் அறிவிப்பு இந்த சந்தேகங்களை மேலும் வலுவாக்கியுள்ளது.
2வது டெஸ்ட்டில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக 33 வயதான அறிமுக வீரர் சரண்ஷ் ஜெயின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். குல்தீப்பின் இந்த நீக்கம் மற்றும் பிசிசிஐ-யின் முரண்பட்ட அறிவிப்புகள் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்துப் பல முன்னாள் வீரர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஒரு திறமையான வீரரை இவ்வாறு அணியில் இருந்து ஒதுக்கி வைப்பது அவரது எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றும், கில் மற்றும் கௌதம் கம்பீர் கூட்டணி மூத்த வீரர்களைக் கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications

