டெல்லி: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் ஓடி வந்து அம்பயரிடம் கோபத்தை காட்டிய குல்தீப் யாதவை சமாதானம் செய்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு சாய் சுதர்சன் சதம் அடித்தார்.
இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 199 ரன்கள் எடுத்தது. அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது. அப்போது அந்த அணியின் துவக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்திருந்தனர். அப்போது குல்தீப் யாதவ் பந்துவீச, பந்து சாய் சுதர்சனின் காலில் பட்டது. இதை அடுத்து குல்தீப் யாதவ் எல்பிடபுள்யூ அவுட் கேட்டார். ஆனால், அம்பயர் அவுட் தர மறுத்துவிட்டார்.

இதை அடுத்து டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் ரிவ்யூ செய்வதாக சைகை செய்தார். ஆனால், ரிவ்யூவில் எப்படியும் 'அம்பயர் கால்' என முடிவு வரும், அதனால் விக்கெட் வாய்ப்பு பறிபோகும் என நினைத்த குல்தீப் யாதவ் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அம்பயர் அருகே சென்று சில வார்த்தைகள் பேசியவர், இது 'அம்பயர் கால்' என முடிவாகும் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்போது கேப்டன் அக்சர் படேல் ஓடி வந்து அவரை சமாதானம் செய்தார்.
நினைத்தது போலவே மூன்றாவது அம்பயர், 'அம்பயர் கால்' என முடிவு அறிவித்து அவுட் இல்லை என அறிவித்தார். ஏனெனில், பந்து சரியாக விக்கெட்டுக்கு நேராக பிட்ச் ஆகி இருந்தது, பேட்ஸ்மேன் காலிலும் பட்டது. ஆனால் அதன் பிறகு லெக் ஸ்டம்பில் பந்து பட்டது. ரிவ்யூ கேட்கும் போது லெக் ஸ்டம்பில் பந்து பட்டால், களத்தில் இருக்கும் அம்பயர் என்ன முடிவெடுக்கிறாரோ அந்த முடிவுதான் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
களத்தில் இருந்த அம்பயர் அவுட் இல்லை என அறிவித்திருந்ததால், மூன்றாவது அம்பயரும் அவுட் இல்லை என அறிவித்தார். லெக் ஸ்டம்ப் விதியால் குல்தீப் யாதவுக்கு விக்கெட் கிடைக்கும் வாய்ப்பு பறிபோனது. அதனால்தான் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பின்னர் அபாரமாக ஆடிய சாய் சுதர்சன் சதம் அடித்தார். மற்றொருபுறம் சுப்மன் கில் 93 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து வெற்றி இலக்கை எட்டினர். குஜராத் டைட்டன்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.