குல்தீப் யாதவ் - வன்ஷிகா திருமணம்.. டான்ஸ் ஆடி அசத்திய சாஹல், ரிங்கு சிங், திலக் வர்மா!
லக்னோ: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், தனது நீண்டகால தோழி வன்ஷிகா சிங்கை மார்ச் 14 அன்று உத்தராகண்டில் உள்ள முசோரியில் நடைபெற்ற பிரம்மாண்டமான திருமண விழாவில் கரம்பிடித்தார். கான்பூரைச் சேர்ந்த இவர்கள் இருவரும் சிறுவயது முதலே நெருக்கமான நண்பர்களாக இருந்து வந்த நிலையில், தற்போது தங்கள் காதலை திருமண பந்தமாக மாற்றியுள்ளனர்.
இந்த மகிழ்ச்சியான நிகழ்வில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான யுஸ்வேந்திர சாஹல், திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடினர். திருமண விழாவின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக, சடங்குகள் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் இந்திய வீரர்கள் கலந்துகொண்டு குதூகலித்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

குல்தீப் யாதவ் பொதுவாகவே தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் காட்டிக்கொள்ளாதவர் என்பதால், அவரது திருமண கொண்டாட்டம் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. 2017 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான 30 வயதான குல்தீப் யாதவ், இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரராகத் திகழ்கிறார்.
முக்கியமான நடு ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றிகளைப் பெற்றுத் தரும் முக்கிய ஆயுதமாக அவர் செயல்பட்டு வருகிறார். இவரின் இந்த புதிய வாழ்க்கைப் பயணத்திற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் சக கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். சமீபத்தில் 2026 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய டி20 அணியிலும் குல்தீப் யாதவ் இடம் பெற்று இருந்தார். உலகக்கோப்பை வென்ற கையோடு திருமணமும் செய்து இரட்டை கொண்டாட்டத்தை பெற்றுள்ளார் குல்தீப் யாதவ்.
வன்ஷிகா சதா
குல்தீப் யாதவின் மனைவி வன்ஷிகா சதா, உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர். இவர் குல்தீப்பின் சிறுவயது தோழி ஆவார். இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்களாக அறிமுகம் ஆனவர்கள். நீண்ட காலமாகக் காதலித்து வந்த இவர்கள், கடந்த ஜூன் 4, 2025 அன்று லக்னோவில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். வன்ஷிகா கான்பூரில் உள்ள சர்ச் அண்ட் மிஷன் பள்ளியில் கல்வி பயின்றவர் மற்றும் தற்போது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (LIC) நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.


Click it and Unblock the Notifications