வெங்கடேஷ் பிரசாத் சாதனை காலி.. இந்தியாவின் 'டாப் 9' பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ்.. புதிய மைல்கல்
திருவனந்தபுரம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் 9வது அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத்தின் வாழ்நாள் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ், 10 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். அதிரடியாக ஆடி 62 ரன்கள் எடுத்த ஜான் கேம்ப்பல்லை ஆட்டமிழக்கச் செய்து தனது கணக்கைத் தொடங்கிய குல்தீப், பின்னர் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் வெங்கடேஷ் பிரசாத்தின் 196 விக்கெட்டுகள் சாதனையை சமன் செய்தார்.

தொடர்ந்து சதம் அடித்து நங்கூரமாக நின்ற ஜஸ்டின் க்ரீவ்ஸை எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கி பிரசாத்தின் சாதனையை தகர்த்தார். அடுத்த பந்திலேயே ஜூவல் ஆண்ட்ரூவையும் டக் அவுட் செய்து, தனது மொத்த ஒருநாள் விக்கெட் எண்ணிக்கையை 198 ஆக உயர்த்தினார்.
குல்தீப் யாதவ் 122 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 198 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடரின் அடுத்த 2 போட்டிகளில் இன்னும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால், ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை எட்டிய 4வது இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார். இதற்கு முன் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர்.
இந்தியாவின் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்:
அனில் கும்ப்ளே - 334 விக்கெட்டுகள்
ஜவகல் ஸ்ரீநாத் - 315 விக்கெட்டுகள்
அஜித் அகர்கர் - 288 விக்கெட்டுகள்
ஜாகீர் கான் - 269 விக்கெட்டுகள்
ஹர்பஜன் சிங் - 265 விக்கெட்டுகள்
கபில் தேவ் - 253 விக்கெட்டுகள்
ரவீந்திர ஜடேஜா - 232 விக்கெட்டுகள்
முகமது ஷமி - 206 விக்கெட்டுகள்
குல்தீப் யாதவ் - 198 விக்கெட்டுகள்
வெங்கடேஷ் பிரசாத் - 196 விக்கெட்டுகள்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள குல்தீப் யாதவ் இதுவரை 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 44 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications

