குல்தீப் யாதவ் திருமண வரவேற்பு.. முதல்வர் யோகி ஆதித்யநாத், கம்பீர், ஜடேஜா நேரில் வாழ்த்து
லக்னோ: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், வன்ஷிகா சிங் தம்பதியரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி லக்னோவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. மார்ச் 14 அன்று உத்தரகண்டின் முசூரியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ எளிமையாக நடந்த திருமணத்தைத் தொடர்ந்து, இந்த பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்வில் ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்கள் மனைவியுடன் வருகை தந்தனர்.

ஓட்டலுக்கு வந்தடைந்த இந்த முக்கிய வீரர்கள், மலர் தூவி உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். ரவீந்திர ஜடேஜா லக்னோ விமான நிலையம் வந்தடைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல முக்கிய அரசியல் தலைவர்களும் இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர்.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்களான பிரிஜேஷ் பதக் மற்றும் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதே போன்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் இந்நிகழ்வில் பங்கேற்று தம்பதியினரை வாழ்த்தினார். இந்த தம்பதியினருக்கு கடந்த ஆண்டே திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் டி20 உலககோப்பைக்கு தயாராகும் வகையில் குல்தீப் யாதவ், தனது திருமணத்தை ஒரு ஆண்டு தள்ளி வைத்தார்.
எனினும் பெரிய அளவு இந்த தொடரில் பெஞ்சிலே அமர வைக்கப்பட்டு இருந்தார். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டியில் அவர் பங்கேற்று இருந்தார். டி20 உலககோப்பை முடிந்த பிறகு அர்ஜூன் டெண்டுல்கர், பிரித்வி ஷா மற்றும் குல்தீப் யாதவ் என்று 3 வீரர்களுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. வரும் சீசனில் குல்தீப் யாதவ், டெல்லி அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார். அவரை 13 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து டெல்லி அணி தக்கவைத்தது.


Click it and Unblock the Notifications