வெலிங்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 12,000 ரன்களை குறைந்த இன்னிங்ஸ்களில் எடுத்து இலங்கையின் சங்ககரா சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான சங்ககரா உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். 37-வயதான அவர் கடந்த மாதம் ஒருநாள் போட்டியில் 13 ஆயிரம் ரன்னை கடந்து 4-வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்த நிலையில் சங்ககரா இன்று டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்னை தொட்டு சாதனை புரிந்தார். நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் 5 ரன்னை எடுத்தபோது அவர் 12 ஆயிரம் ரன்களைத் தொட்டார்.
130 டெஸ்ட்டில் விளையாடி சங்ககரா 12,028 ரன் எடுத்துள்ளார். அவர் 37 சதமும், 51 அவரை சதமும் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 12 ஆயிரம் ரன்னை எடுத்த முதல் இலங்கை வீரர் சங்ககரா ஆவார். உலக அளவில் 5-வது வீரர் ஆவார்.
இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் ஆகியோர் 247 இன்னிங்ஸ்களில் 12,000 ரன்களைக் கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.