11 வயதிலே சூர்யவன்ஷியை RR கண்டுபிடித்தது. 2023 IPL சீசனில் வாங்கி இருப்போம்- சங்கக்காரா பேச்சு
மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்தார். அந்த தொடரில் 7 இன்னிங்ஸ் விளையாடிய சூரியவன்ஷி மொத்தமாக 252 ரன்கள் அடித்தார். இதன் மூலம் ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகத்தையும் அவர் ஆச்சரியப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அண்டர் 19 அணியிலும் விளையாடி அவர் சதம் அடித்தார். இந்த நிலையில் வைபவ் சூர்யவன்சியை 2023 ஆம் ஆண்டே தாங்கள் கண்டுபிடித்து விட்டதாகவும், ராஜஸ்தான் அணியில் அவரை சேர்க்க முயற்சி செய்ததாகவும் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமாரா சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சூரியவம்சி ஏற்கனவே தான் ஒரு திறமை வாய்ந்த வீரர் என்பதை நிரூபித்து இருக்கின்றார். கடந்த 2023 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் வைபவ் சூர்யவன்சியின் ஆட்டத்தை பார்த்திருக்கிறார். அவர் மிகவும் ஸ்பெஷலான வீரர்.
அவரை நாம் கண்காணிக்க வேண்டும். அவருடைய திறமையை அழைத்து சோதனை செய்யுங்கள் என்று எங்களிடம் கூறினார். ஆனால் அப்போது அது நடக்காமல் போய்விட்டது. இதனை அடுத்து ராஜஸ்தான் அணி சூரிய வம்சியை தேர்வு செய்த பிறகு நான் அவருடைய ஆட்டத்தை நேராகவே பார்த்தேன். இதற்கு முன்பு அவர் வலை பயிற்சியில் எப்படி பேட்டிங் செய்கிறார் என்ற வீடியோ மட்டும் நான் பார்த்தேன்.
குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர்களை அவர் வலை பயிற்சியில் அபாரமாக எதிர்கொண்டார். உலகின் முன்னணி பவுலர்களை எதிர்கொள்கிறோம் என்ற பதற்றமே இல்லாமல் எளிதாக அந்த பந்துகளை அடித்தார். அவர் பேட்டிங் விளையாடும்போது வரும் சத்தம் ஏதோ துப்பாக்கியில் இருந்து வரும் சத்தம் போல் இருந்தது.
அவருடைய பேட் ஸ்விங் அற்புதமாக இருந்தது. குறிப்பாக ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அவர் அபாரமாக எதிர்கொள்கின்றார். மேலும் கிரிக்கெட் மீது ஆர்வமாக இருக்கின்றார். ஒவ்வொரு ஷாட்டையும் அவர் மெருகேற்ற முயற்சி செய்கின்றார். இது அவருக்கு வெறும் ஆரம்பம்தான். இன்னும் மிக சிறப்பான சாதனைகளை அவர் படைப்பார் என்று நான் நம்புகிறேன் என சங்ககாரா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications