ஹைதராபாத் : பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியில் ஏமாற்று வேலை நடந்துள்ளதாக ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்.
இந்தப் போட்டியில் இலங்கை வீரர் குசால் மென்டிஸ் அதிரடி ஆட்டம் ஆடி சதம் அடித்தார். அதன் பின்னும் அடங்காமல் அடித்த அவர் 77 பந்துகளில் 122 ரன்கள் குவித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த கேட்ச் தான் சர்ச்சையாக மாறி இருக்கிறது.

பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையே ஆன போட்டியில் இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் குசால் பெரேரா டக் அவுட் ஆனார். பின் ஜோடி சேர்ந்த பதும் நிசங்கா - குசால் மென்டிஸ் ஜோடி அதிரடி ஆட்டம் ஆடியது.
நிசங்கா 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சதீரா ச்மரவிக்ரமா, குசால் மென்டிஸ் உடன் சேர்ந்து அவரின் அதிரடி ஆட்டத்தை தொடரச் செய்தார். குசால் மென்டிஸ் 65 பந்துகளில் சதம் அடித்தார். அதைத் தொடர்ந்தும் அதிரடியாக பவுண்டரிகளை அடிக்க பாகிஸ்தான் அணி அவர் விக்கெட்டை எடுக்க முடியாமல் திணறியது.
ஹசன் அலி வீசிய 29வது ஓவரில் அவர் தொடர்ந்து இரண்டு சிக்ஸ் அடித்தார். அதை ஹாட்ரிக் சிக்ஸ் ஆக மாற்ற முடிவு செய்த அவர் மீண்டும் பந்தை தூக்கி அடித்தார். அந்த பந்தை பவுண்டரி எல்லைக்கு மிக அருகே இமாம் உல் ஹக் கேட்ச் பிடித்தார்.

அப்போது பவுண்டரி எல்லைக் கோடு இருந்த இடம் சற்றே தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. முன்பு பவுண்டரி எல்லை இருந்த இடத்தின் அச்சு வீடியோவில் தெளிவாக தெரிந்தது. சரியாக அந்த இடத்தில் தான் இமாம் கேட்ச் பிடித்த பின் விழுந்தார். ஒருவேளை அந்த இடத்தில் பவுண்டரி எல்லைக் கோடு இருந்திருந்தால் அது சிக்ஸராக மாறி இருக்கும்.
இதை அடுத்து ரசிகர்கள் பலர் குசால் மென்டிஸ் அவுட் ஆகவில்லை. சிக்ஸ் போன பந்தை பாகிஸ்தான் அணி கேட்ச் பிடித்து இருக்கிறது என பொங்கத் துவங்கினர்.
ஆனால், ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பு உலகக்கோப்பைக்கு முன்பு இருந்த இந்த பவுண்டரி எல்லையை, உலகக்கோப்பைக்காக மாற்றி அமைத்து இருக்கலாம். அதனால், நீண்ட காலமாக இருந்த பழைய பவுண்டரி எல்லையின் அச்சு மாறாமல் அப்படியே இருந்திருக்கலாம்.
எப்படி இருந்தாலும், இலங்கை பேட்டிங் செய்யும் போது பவுண்டரி எல்லை எங்கே இருந்ததோ, பாகிஸ்தான் பேட்டிங் செய்யும் போதும் அங்கேயே தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இதை ஏமாற்று வேலை என ஒரேடியாக சொல்லி விட முடியாது. அதே சமயம், பாகிஸ்தான் அணி இந்த பவுண்டரி எல்லையை மாற்றி அமைத்தார்களா? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.