ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி கேப்டனாக இருந்த தோனி பேட்டிங் செய்ய இறுதி கட்டத்தில் தான் களத்திற்கு நடப்பு சீசனில் வந்தார். இதற்கு காரணம் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
தோனியும் ஐஸ்கட்டியை காலில் கட்டிக் கொண்டு நடக்க முடியாமல் நடந்த பல வீடியோக்களும் இணையதளத்தில் வெளியானது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதும் தோனி வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக மும்பைக்கு சென்றார்.

அங்கு பிசிசிஐ மருத்துவ குழுவில் இடம் பெற்றுள்ள மருத்துவர் தின்ஷாவை சந்தித்து தோனி முழங்காலில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இதனை அடுத்து இரண்டு நாட்கள் அங்கு தங்கி இருந்த தோனி தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்று இருக்கிறார். இந்த நிலையில் தோனி உடல் தகுதியை மீட்கும் வேலையில் ஈடுபடுவார் என்றும் அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன் தோனியை வெகுவாக பாராட்டியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், எம் எஸ் தோனி தற்போது மூட்டு அறுவை சிகிச்சையை செய்து கொண்டிருக்கிறார் என கேள்விப்பட்டேன்.அது தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. ஒரு சீசன் முழுவதும் தோனி ஒரு காலில் விளையாடி இருக்கிறார். அவர்தான் உண்மையான தலைவர். வலி இல்லாமல் எதையும் நாம் பெற முடியாது.

காலில் இவ்வளவு வலி இருந்தும் தோனியின் சிந்திக்கும் திறமை கொஞ்சம் கூட பாதிக்கப்படவில்லை. இவ்வளவு வலியை தாங்கிக் கொண்டு அவரால் எப்படி சிஎஸ்கே அணியை வழிநடத்த முடிந்தது என்று நினைத்தாலே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு போர் வீரனுக்கு உடைய மனவலிமை தோனிக்கு இருக்கிறது. தோனி உண்மையிலேயே ஒரு சாம்பியன் தான் என்று சிவராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.