இஸ்லாமாபாத்: இந்தியாவில் தொடங்க உள்ள சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானின் லாகூர் லையன்ஸ் அணிக்கு இந்தியா விசா அளித்துள்ளது. நீண்ட இழுபறிக்கு பிறகு விசா வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
பல நாடுகளிலுள்ள உள்ளூர் அணிகளில் சிறந்த அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் 13ம்தேதி முதல் அடுத்த மாதம் 4ம்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தானின் லாகூர் லையன்ஸ் அணி தேர்வாகியிருந்தது. ஆனால் இந்தியாவிற்கு அந்த அணியினர் வருகை தர தேவையான விசா வழங்க இந்தியா மறுத்து வந்தது. இந்நிலையில், இந்திய உயர் கமிஷன் விசா வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
விசா மற்றும் பயண டிக்கெட்டுகள் தங்களுக்கு வந்து சேர்ந்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த வாரிய அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "இந்தியாவின் செயல்பாடு ஆக்கப்பூர்வமானது. இனிமேல் ஐபிஎல் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்கவும் இந்த அனுமதி அடித்தளம் அமைக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.
முகமது ஹபீஸ் தலைமையிலான லாகூர் லையன்ஸ் அணியில் உமர் அக்மல், கம்ரான் அக்மல், நாசீர் ஜாம்ஷெட், அகமது ஷெஜாட், வகப் ரியாஸ் உள்ளிட்ட தற்போதைய பாகிஸ்தான் அணியில் விளையாடும் வீரர்கள் பலர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.