யார் இந்த "ஷியாம்சுவாமி"... 3 'பெட்டிங்' வீரர்களின் பெயரைச் சொல்லி விட்டுக் காணாமல் போய் விட்டாரே!
டெல்லி: ஷியாம் சுவாமி என்ற பெயரில் வெளியான கிரிக்கெட் பெட்டிங் குறித்த பரபரப்பைக் கிளப்பிய டிவிட்டர் நபர் தற்போது ஆள் அட்ரஸே இல்லை. அந்த. டிவிட்டர் பக்கமும் அழிக்கப்பட்டு விட்டது. இதனால் யார் இந்த ஷியாம் சுவாமி, திடீரென இவர் முளைத்து திடீரென மாயமானதன் காரணம் என்ன. லலித் மோடியே உருவாக்கிய மாறுவேட டிவிட்டர் பக்கமா இது என்று குழப்பம் எழுந்துள்ளது.
லலித் மோடி அக்கப்போர் இன்னும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே போகிறது. வீரப்பன் போல, லண்டனில் போய் பதுங்கிக் கொண்டு சகட்டுமேனிக்கு இந்தியாவில் சர்ச்சைகளைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் இந்த லலித் மோடி.
இவருக்கு பாஜக உயர் மட்டத்தில் ஏகப்பட்ட ஆதரவாளர்கள், பாதுகாவலர்கள். நடப்பதையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப சீக்கிரமே லலித் மோடி பல பிரச்சினைகளிலிருந்து பத்திரமாக மீண்டு வந்து விடுவார் போலத் தெரிகிறது.
திடீரென முளைத்த ஷியாம்சுவாமி
இந்த நிலையில் ஷியாம்சுவாமி158 என்ற ஒரு டிவிட்டர் ஹேண்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்த டிவிட்டர் ஹேண்டில், லலித் மோடி, ஐசிசிக்கு எழுதிய ஒரு கடிதத்தை வெளியிட்டு விட்டு குளோஸ் செய்யப்பட்டு விட்டது.

கடிதத்தை வெளியிட்ட ஷியாம்சுவாமி
2013ம் ஆண்டு ஜூன் மாதம் ஐசிசி செயல் அதிகாரி தவே ரிச்சர்ட்சனுக்கு லலித் மோடி எழுதிய கடிதம் அது. அதில் ஐபிஎல் போட்டிகளின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரத்தை லலித் மோடி கூறியுள்ளார்.

3 வீரர்கள்
அதில், ஒரு புக்கியிடமிருந்து ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சுரேஷ் ரெய்னா, வேயன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ரூ. 20 கோடிப் பணம் பெற்றுள்ளனர். இந்த புக்கி, ராஜ் குந்த்ரா மற்றும் குருநாத் மெய்யப்பனுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். என்று கூறியிருந்தார் லலித் மோடி.

10 நிமிடத்தில் பதிலளித்த லலித் மோடி
இந்த டிவிட் வெளியான பத்து நிமிடங்களில் லலித் மோடி அந்த டிவிட்டுக்குப் பதில் அளித்துள்ளார். அதில், ஐசிசி, பிசிசிஐ, ஐபிஎல்லைப் போய்க் கேளுங்கள். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். இது மிகவும் ரகசியமான கடிதம். இதையெல்லாம் டிவிட் செய்யக் கூடாது என்று அதில் அவர் கூறியிருந்தார்.

காணாமல் போன ஹேண்டில்
ஆனால் தற்போது அந்த ஷியாம்சுவாமி ஹேண்டில் காணவில்லை. அதை நீக்கி விட்டனர். இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. லலித் மோடியின் கடிதத்தை மட்டுமே வெளியிடுவதற்காக இந்த போலி ஹேண்டில் உருவாக்கப்பட்டதா, அதை உருவாக்கியவர் யார், லலித் மோடியே இதை உருவாக்கினாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

லலித் மோடியின் டுபாக்கூர் ஐடி
இது லலித் மோடியின் போலி முகவரியே என்று பலரும் டிவிட்டரில் விவாதித்து வருகிறார்கள்.

விசாரணைக்குக் கோரிக்கை
இந்த நிலையில் பரோடா கிரிக்கெட் சங்கத் தலைவர் ஆதித்யா வர்மா உள்ளிட்டோர் லலித் மோடி எழுதிய கடிதம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.


Click it and Unblock the Notifications