லலித் மோடி மீதான FEMA வழக்கு ரத்து.. 16 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கருத்து
மும்பை: 2009-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு ஐபிஎல் தொடர் மாற்றப்பட்டது தொடர்பான முதன்மை சட்ட நடவடிக்கைகளில், முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடிக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை SAFEMA-ன் கீழுள்ள மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் லலித் மோடிக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. 2009 பொதுத் தேர்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் இரண்டாவது சீசன் இந்தியாவில் இருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் தொடர்பான அமலாக்கத்துறையின் வாதத்தை இந்த தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி, வெளிநாட்டிற்கு அந்நியச் செலாவணி பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி, வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 243கோடி மதிப்பிலான அந்நியச் செலாவணி மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த விசாரணைகள் மற்றும் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு வந்துள்ள இந்த தீர்ப்பு குறித்து லலித் மோடி கருத்து தெரிவித்துள்ளார். 2009 ஐபிஎல் தொடர்பான முதன்மை பணப்பரிமாற்றங்கள் அனைத்தும் current account transactions என்று தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும், பிசிசிஐ-யின் சட்டப்பூர்வ ஃபெமா (FEMA) இணக்கத்திற்கான பொறுப்பு தன்னிடம் இல்லை என்றும், அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது போன்ற நிதி அதிகாரம் தன்னிடம் வழங்கப்படவில்லை என்றும் தீர்ப்பாயத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக லலித் மோடி விளக்கினார்.
2009 ஐபிஎல் சீசனில் இருந்து எழுந்த மிகப்பெரிய சட்டப் போராட்டத்தின் இறுதி முடிவு இது என்று குறிப்பிட்டுள்ள மோடி, "2009 தென் ஆப்பிரிக்கா ஐபிஎல் தொடரிலிருந்து உருவான மிக முக்கியமான சட்ட விவகாரத்தின் முடிவை இது குறிக்கிறது" என்றார்.
"கடந்த பதினாறு ஆண்டுகளுக்கும் மேலாக, நான் ஒரு நேர்மையான நிலைப்பாட்டையே தொடர்ந்து கூறி வருகிறேன். நான் நல்ல எண்ணத்துடனும், இந்திய கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரின் நலனைக் கருதியும் மட்டுமே செயல்பட்டேன். தனிப்பட்ட முறையில் எந்தவொரு தவறையும் நான் செய்யவில்லை" என்று கூறினார்.
இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல்கள் காரணமாக அசாதாரணமான சூழ்நிலைகள் உருவானதால், போட்டியை உள்நாட்டில் நடத்துவது சாத்தியமில்லாமல் போனது என்றும், அதனால்தான் தொடர் தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டது என்றும் மோடி சுட்டிக்காட்டினார். "அந்த சீசனை வெற்றிகரமாக நடத்தியது, ஐபிஎல் தொடர் தொடர்ந்து நீடிப்பதையும், இறுதியில் அது உலகின் மிகவும் மதிப்புமிக்க விளையாட்டு அடையாளங்களில் ஒன்றாக மாறுவதையும் உறுதி செய்தது" என்று அவர் கூறினார்.
இந்த நீண்ட சட்டப் போராட்டம் குறித்துப் பேசிய மோடி, "இந்த நடவடிக்கைகள் முழுவதிலும் நான் சட்ட நடைமுறைக்கு முழுமையாக ஒத்துழைத்தேன். உண்மைகளும் சட்டமும் இறுதியில் வெல்லும் என்பதில் நான் உறுதியான நம்பிக்கையுடன் இருந்தேன்" என்றார். அத்துடன், "எனது வழக்கறிஞர்கள் குழு, எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்த மிக நீண்ட பயணத்தில் என் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்திருந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
"எனது கவனம் இனி முற்றிலும் எதிர்காலத்தை நோக்கியே உள்ளது. இந்த அத்தியாயத்தை கண்ணியத்துடனும் நன்றியுடனும் கடந்து, உலகளாவிய விளையாட்டுத் துறை, வணிகம் மற்றும் தொண்டு நடவடிக்கைகளில் என் பயணத்தைத் தொடர்வேன்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications

