
விண்ணப்பம்
அப்போது லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் விண்ணப்பம் அனுப்பி இருந்தார். அந்த தகவல் ஊடகங்களில் கூட வெளியானது. இந்த நிலையில் தான் அவரது விண்ணப்பம் பிசிசிஐக்கு கிடைக்கவில்லை என்றும், அதனால் அவர் பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

பதவிக் காலம் முடிந்தது
எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவினரின் பதவிக் காலம் கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. அடுத்த குழுவை நியமிக்க கால தாமதம் ஆனதால், பழைய தேர்வுக் குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் வீரர்கள் விண்ணப்பம்
இதன் இடையே, புதிய தேர்வுக் குழுவினருக்கான விண்ணப்பம் கோரியது பிசிசிஐ. முன்னாள் இந்திய வீரர்கள் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன், வெங்கடேஷ் பிரசாத், அஜித் அகர்கர் உள்ளிட்ட பலர் தேர்வுக் குழு உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

இருவருக்கும் போட்டி
இவர்களில் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் மற்றும் அஜித் அகர்கர் ஆகிய இருவருக்கும் தேர்வுக் குழு தலைவர் பதவியை பிடிப்பதில் போட்டி நிலவியது. லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் தலைவர் பதவிக்கு வர அதிக வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் முதலில் கூறப்பட்டது.

அதிர்ச்சி
கங்குலியின் ஆதரவு அவருக்கு அதிகமாக இருப்பதாகவும், தென் இந்திய மாநில கிரிக்கெட் அமைப்புகளின் ஆதரவு அவருக்கு அதிகமாக இருந்ததாலும் அவரே தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப்படுவார் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் தான் அவர் விண்ணப்பம் பிசிசிஐக்கு வந்து சேரவில்லை என்ற அந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

கடைசி தேதி
தேர்வுக் குழு உறுப்பினர்கள் பதவிக்கான விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜனவரி 24 ஆகும். அதற்கு இரு நாட்கள் முன்னதாக ஜனவரி 22 அன்று லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் விண்ணப்பத்தை அனுப்பி இருக்கிறார். அது குறித்த தகவல் பிசிசிஐ இணையதளத்திலும் வெளியானதாக கூறப்படுகிறது.

ஈமெயில் எங்கே?
பிசிசிஐ இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டு இருந்த ஈமெயில் முகவரிக்கு தான் விண்ணப்பத்தை அனுப்பி இருக்கிறார் அவர். ஆனால், அந்த ஈமெயில் வந்து சேரவில்லை என பிசிசிஐ அதிகாரிகள் சிலர் கூறி உள்ளனர். அதனால், இறுதிப் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை எனவும் அவர்கள் கூடி உள்ளனர்.

பிசிசிஐ லாபி
தென் இந்தியர்களுக்கு எதிராகவும், தமிழகத்துக்கு எதிராகவும் பிசிசிஐயில் லாபி இருப்பதாக பொதுவாக கூறப்படுவது உண்டு. அது போன்ற ஒரு பதவி அரசியலில் தான் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணனின் விண்ணப்பம் சிக்கிக் கொண்டு இருக்கிறது என தெரிகிறது.

பிசிசிஐ விசாரணை
ஈமெயில் காணாமல் போவது எல்லாம் இதுவரை கேள்விப்படாத விஷயமாக இருக்கிறதே என பிசிசிஐ-யில் பலரும் வியந்து போய் உள்ளனர். இந்த தகவல் ஊடகங்களில் வெளியான பின்னரே பிசிசிஐ விழித்துக் கொண்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

பதவியை பிடிப்பாரா?
பிசிசிஐ அரசியலை தாண்டி லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் தேர்வுக் குழு தலைவர் பதவியை பிடிப்பாரா? என்பது கேள்விக் குறி தான். விண்ணப்பமே கிடைக்கவில்லை எனக் கூறியவர்கள், அவருக்கு தலைவர் பதவியை அளிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
