கிரிக்கெட்டிலும் வாழ்க்கையிலும் சரி நீங்கள் தோனி மாதிரி நடந்து கொள்ளுங்கள் என்று முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அறிவுரை வழங்கி இருக்கிறார்.
தோனியின் தீவிர ரசிகரான இவர் பல்வேறு போட்டிக்கு கிரிக்கெட் வர்ணனையும் செய்திருக்கிறார். தற்போது தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்பிலும் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் வகித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் இருக்கும் நெகட்டிவிட்டி குறித்து பேசி உள்ள சிவராமகிருஷ்ணன் இளம் வீரர்களுக்கு பல அறிவுரை வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர் நீங்கள் தோனி ரசிகராக இருந்தால் அவரைப் போலவே நடந்து கொள்ளுங்கள். உங்களை சிலர் தேவையில்லாமல் எதிர்க்கும் போது தோனியை போலவே அமைதியாக இருங்கள்.
நீங்கள் சோர்வு அடைவதற்கு முன்பே அவர்கள் சோர்ந்து போய்விடுவார்கள். கடைசி வரை நீங்கள் நின்று வெற்றி பெறுவீர்கள். நீங்கள் யாருக்கு எதிராக விளையாடினாலும் சரி தேவையில்லாமல் உங்களுடைய சக்தியை வீணடிக்காதீர்கள். உங்களுடைய சக்தியை சேமித்து வைத்துக் கொண்டு முக்கியமான நேரத்தில் வெளிப்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்துங்கள்.
உங்களுடைய மனதில் போட்டியை விளையாடி பாருங்கள். நீங்கள் சரியாக மனதளவில் இருந்தால் நிச்சயம் நீங்கள் தான் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். காமெடி, கிரிக்கெட், வாழ்க்கை இந்த மூன்றிலும் சரியான நேரம் என்பது மிகவும் முக்கியம். சமூக வலைத்தளத்தில் உங்களுக்கு யாராவது மோசமாக பதில் அளித்து இருந்தால் அவருடைய பின்புலத்தை பாருங்கள்.
கண்டிப்பாக அந்த நபர் ஒரு தேவையில்லாத ஆளாக தான் இருப்பார். நாம் அனைவருமே முக்கியமான தருணத்தில் இருக்கிறோம். எனவே விழிப்புணர்வு என்பது மிகவும் முக்கியம். எப்போதுமே கவனமாக இருங்கள் வேகப்பந்துவீச்சாளர் பந்து வீசும் போது ஸ்லிப் ஃபீல்டர் எப்படி கவனமாக இருப்பாரோ அதேபோல் நீங்களும் இருங்கள் என்று லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அறிவுரை வழங்கியிருக்கிறார்.