Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கருப்பாக இருப்பதால் புறக்கணிப்பு.. டாஸ் போடும்போது கூப்பிடுவதில்லை.. லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் புகார்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், மூத்த வர்ணனையாளருமான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பிசிசிஐ வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து தன்னை பிசிசிஐ புறக்கணித்து வருவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவரது இந்த அதிரடி முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

60 வயதான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ளார். "பிசிசிஐ வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன். கடந்த 23 ஆண்டுகளாக டாஸ் போடும் நிகழ்வு மற்றும் போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழா ஆகியவற்றில் வர்ணனை செய்ய பிசிசிஐ என்னை அனுமதிக்கவே இல்லை. ரவி சாஸ்திரி, ஹர்ஷா போக்லே போன்றவர்களுக்கும், புதிதாக வர்ணனைக்கு வருபவர்களுக்கும் மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனது சுயமரியாதையை இழந்து என்னால் யாருக்கும் அடிபணிந்து கிடக்க முடியாது" என்று தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Laxman Sivaramakrishnan Quits BCCI Commentary Panel Citing 23 Years of Humiliation and Bias

மேலும் அவர் கூறுகையில், "எனது இந்த ஓய்வு ஒரு நீண்ட கதையின் தொடக்கம் மட்டுமே. இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவரும்போது பொதுமக்களும் கிரிக்கெட் ரசிகர்களும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள். பிசிசிஐ இதை நம்ப முடியாமல் திகைத்து நிற்கும்" என எச்சரித்துள்ளார். ஒரு ரசிகர், "நீங்கள் கருப்பாக இருப்பதால் உங்களை பரிசளிப்பு நிகழ்வில் அனுமதிக்கவில்லையா?" எனக் கேட்டதற்கு, "நீங்கள் சொல்வது சரி. நிற பாகுபாடுதான்" எனக் கூறி இருக்கிறார்.

1985 உலக சாம்பியன்ஷிப் தொடரில் அபாரமாகச் செயல்பட்ட லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், இந்தியாவுக்காக 9 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முறையே 26 மற்றும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது விலகல் குறித்து மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், "ஓ நோ! இந்த ஐபிஎல் தொடரில் ஏன் நீங்கள் இல்லை?" எனத் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதற்கிடையே, பெரிதும் எதிர்பார்க்கப்படும் 2026 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி பெங்களூருவில் பிரம்மாண்டமாகத் தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதுவரை முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல் தேதிகள் முடிவானவுடன் மீதமுள்ள போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியிடப்படும் என பிசிசிஐ அறிவித்து இருந்தது. அம்மாநிலங்களுக்கான தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் முழு ஐபிஎல் அட்டவணை வெளியாக வாய்ப்பு உள்ளது.

Story first published: Friday, March 20, 2026, 19:02 [IST]
Other articles published on Mar 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+