பல்லேகேலே : இலங்கையில் நடைபெற்று வரும் 2024 லெஜண்ட்ஸ் கிரிக்கெட் ட்ராபி தொடரில் யுவராஜ் சிங் தலைமையிலான நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான டெல்லி டெவில்ஸ் அணியும் மோதின. இது ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களை கொண்டு நடத்தப்படும் 15 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆகும்.
இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் அணி பேட்டிங்கில் கலக்கியது. முதலில் பேட்டிங் செய்த நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு துவக்க வீரராக இறங்கிய லாஹிரு திரிமன்னே தனது அதிரடி ஆட்டத்தால் போட்டியை தனி ஆளாக தன் அணியின் பக்கம் திருப்பினார். அவர் 39 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். 11 போர், 5 சிக்ஸ் அடித்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே அடித்தனர். யுவராஜ் சிங் மிடில் ஆர்டரில் இறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் ஏழாம் வரிசையில் தான் பேட்டிங் இறங்கினார். அப்போது கடைசி ஓவர் என்ற நிலையில் அவர் இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்தார். அதில் ஒரு சிக்ஸ் அடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.
இதை அடுத்து நியூயார்க் அணி 15 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. அடுத்து சுரேஷ் ரெய்னாவின் டெல்லி டெவில்ஸ் அணி ஆடியது. அந்த அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களான மோர்னே வான் விக் 10, அமிடோஸ் சிங் 4, கல்லம் பெர்குசன் 8 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினர்.
சுரேஷ் ரெய்னா நான்காம் வரிசையில் இறங்கி அணியை தனி ஆளாக கரை சேர்க்க முயன்றார். ஆனால், அவரால் 35 பந்துகளில் 50 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதே அணியில் அம்பதி ராயுடுவும் இருந்தார். அவர் 15 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
இதை அடுத்து டெல்லி டெவில்ஸ் அணி 15 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே சேர்த்தது. யுவராஜ் சிங் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. யுவராஜ் சிங் பந்து வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.