ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய அணி வீரர்கள் கை கொடுக்காமல் புறக்கணித்துவிட்டு சென்றது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. இரு நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட போர் பதற்றம், புல்வாமா தாக்குதல் போன்ற காரணங்களால் பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் இந்திய வீரர்கள் சென்றனர்.
இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்திய நிலையில் இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய வீரர்கள் செய்தது சரிதான் என்று ஒரு தரப்பினர் கூறி வந்தாலும், பாகிஸ்தான் தரப்பு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விளையாட்டில் அரசியலை கலக்க வேண்டாம் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசியல் மற்றும் போர் காரணங்களால் எதிரணியைச் சேர்ந்த வீரர்களிடம் கைகுலுக்காமல் சென்றது இது முதல் முறை அல்ல. இது ஏற்கனவே பலமுறை நடந்திருக்கின்றது. குறிப்பாக, ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து பல உக்ரைன் வீராங்கனைகள் ரஷ்யா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களிடம் கைகுலுக்காமல் சென்றிருக்கிறார்கள்.
2022 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவைப் பற்றி பேசிய பிறகு, மார்டா கோஸ்ட்யுக் என்ற உக்ரைன் வீராங்கனை கைகுலுக்காமல் தவிர்த்தார். போருக்கு எதிராக பெலாரஸ் வீராங்கனை பேசாததால் இதனை செய்ததாக அவர் கூறினார். இதேபோன்று விம்பிள்டன் 2023 ஆம் ஆண்டு டென்னிஸ் போட்டியில் உக்ரைன் வீராங்கனை எலினா சுவிதோலினா, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவிடம் கைகுலுக்க மறுத்தது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதேபோன்று பிரெஞ்சு ஓபன் 2023 ஆம் ஆண்டு தொடரில் சபலென்காவிடம் மார்டா கோஸ்ட்யுக் கைகுலுக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று கத்தி சண்டை (பென்சிங்) உலக சாம்பியன்ஷிப் தொடரில் ரஷ்ய வீரர் நோவாக் கைகுலுக்க வந்தபோது உக்ரைன் வீரர் கார்சி மறுத்தது. இதனால் கார்சனுக்கு தற்காலிக தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது விலகப்பட்டது. இதேபோல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து பல நாட்டு விளையாட்டு வீரர்கள் இஸ்ரேல் வீரர்களிடம் கைகுலுக்காமல் மறுத்து சென்றிருக்கிறார்கள்.
2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ விளையாட்டில் இஸ்ரேல் வீரர் ஓர் சசோனை தோற்கடித்து எகிப்து வீரர் இஸ்லாம் எல்-ஷெஹாபி கைகுலுக்க மறுத்தார். இதனால் அவர் தண்டிக்கப்பட்டு தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதேபோன்று ஜூடோவில் 2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நூர்அலி என்ற கஜகஸ்தான் வீராங்கனை இஸ்ரேல் வீராங்கனை பாலூசை தோற்கடித்து கைகுலுக்க மறுத்தார். அப்போது அவர் "அல்லாஹு அக்பர்" என்று முழக்கமிட்டார்.
இது போன்று 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மொரோக்கோ வீரர் ரஹ்மான் இஸ்ரேல் வீரரை வீழ்த்தி கைகுலுக்க மறுத்தார். 2021 உலக சாம்பியன்ஷிப் ஜூடோ போட்டியில் எகிப்து வீரர் முகமது அப்துல் இஸ்ரேல் வீரர் ஷாகி மூடியை தோற்கடித்த பின் கைகுலுக்க மறுத்துவிட்டார். இன்னும் BDS என்ற ஒரு இயக்கமே நடத்தப்பட்டது. புறக்கணிப்பு, தண்டனை, முதலீடு செய்யாமல் இருத்தல் ஆகிய கொள்கையை வைத்து இந்த இயக்கம் நடத்தப்படுகிறது. இது விளையாட்டு உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.