கோவை : தமிழ்நாட்டில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பல ஆண்டு கோரிக்கை தற்போது நிறைவேற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட் அரங்கில் தமிழ்நாட்டின் பங்கு மிகவும் முக்கியம் அவ்வளவு ஏன் பிசிசிஐ என்ற சங்கத்தை பதிவு செய்தது தமிழ்நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான்.
அது மட்டுமல்லாமல் கிரிக்கெட் அரங்கில் சென்னை சேப்பாக்கம் மைதானம் தனி பெருமையைக் கொண்டது. சென்னையில் தான் இந்திய அணி தங்களுடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை வென்றது. இப்படி பல சாதனைகள் சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்திற்கு இருக்கிறது.

இந்த நிலையில் சின்ன சின்ன மாநிலங்கள் எல்லாம் இரண்டு, மூன்று சர்வதேச கிரிக்கெட் மைதானங்களை வைத்திருக்கும் நிலையில், பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கும் தமிழ்நாட்டில் மட்டும் சென்னையில் ஒரே ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானம் தான் இருக்கிறது. இதனால் சர்வதேச தரத்தில் தமிழகத்தில் மற்ற இடங்களில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலமுறை கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் டிஎன்பிஎல் சேலம், நெல்லை, நத்தம் போன்ற இடங்களில் கிரிக்கெட் மைதானங்கள் உருவாக்கப்பட்டாலும் அது சர்வதேச போட்டிகளை நடத்தும் அளவுக்கு வசதிகளை பெறவில்லை. இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பாக தற்போது கோவையில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது.
அதன்படி தமிழகத்தில் தற்போது சென்னையில் மட்டும் தான் எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் மாபெரும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க வாக்குறுதி கொடுப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த மைதானம் சர்வதேச தரத்தில் மட்டுமல்லாமல் பெரிய அளவில் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் அதிநவீன முறையில் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இந்த கிரிக்கெட் மைதானத்தில் மற்ற போட்டிகளுக்கும் இடம் அளிக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்து தரப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்தவுடன் இது தொடர்பான நடவடிக்கையை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுப்பார் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னைக்கு பிறகு தமிழகத்தில் தொழில் துறை மற்றும் மற்ற விஷயங்களில் சிறந்த நகரம் என்றால் அது கோவை தான். கோவையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான ஸ்டார் ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இருக்கிறது. மேலும் கோவையில் போட்டியை நடத்தினால் கேரள ரசிகர்களும் அதிக அளவில் வந்து போட்டியை பார்க்க முடியும். இதன் மூலம் கோவையில் உள்ளூர் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி அடையும். சென்னை சேப்பாக்கம் மைதானம் மாதிரி 38 ஆயிரம் பார்வையாளர்கள் இல்லாமல் பெரிய அளவில் கட்டப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.