லக்னோ: லக்னோ அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான மயங்க் யாதவ் காயத்தில் இருந்து கம்பேக் கொடுத்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக என்சிஏவில் காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது ஃபிட்னஸ் சான்றிதழுடன் லக்னோ அணியில் இணைந்துள்ளார். ஆனாலும் அவர் எப்போது களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரின் சென்சேஷனாக இருந்தவர் மயங்க் யாதவ். லக்னோ அணிக்காக ஆடிய அவர், முதல் போட்டியிலேயே மணிக்கு 156.6 கிமீ வேகத்தில் வீசி ஆச்சரியம் கொடுத்தார். ஓவரின் அனைத்து பந்துகளையும் எளிதாக 150கிமீ வேகத்திற்கு மேலாக வீசியதால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் கடந்த சீசனில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடிய மயங்க் யாதவ், காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். இதனால் லக்னோ அணியின் தோல்விகளுக்கு மயங்க் யாதவின் விலகலும் ஒரு காரணமாக அமைந்தது. இருந்தாலும், காயத்தில் இருந்து மீண்டு வந்த அவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய மயங்க் யாதவ், அபாரமாக செயல்பட்டார். ஆனால் அந்த டி20 தொடருக்கு பின் மீண்டும் மயங்க் யாதவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதன்பின் என்சிஏவில் சிகிச்சை பெற்று வந்த மயங்க் யாதவ், குணமடைந்து பவுலிங் செய்ய தொடங்கிய போது மீண்டும் காலில் காயமடைந்தார்.
இருந்தாலும் லக்னோ அணி மயங்க் யாதவை ரூ.11 கோடிக்கு தக்க வைப்பதாக அறிவித்தது. இருப்பினும் இதுநாள் வரை அவர் லக்னோ அணிக்காக இந்த ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இவர் மட்டுமல்லாமல் லக்னோ அணியின் மோசின் கான், ஆகாஷ் தீப் உள்ளிட்டோரும் காயமடைந்து விலகினர்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் பாதி முடிவடைந்த சூழலில், லக்னோ அணியுடன் மயங்க் யாதவ் இணைந்துள்ளார். என்சிஏவில் இருந்து பூரண குணமடைந்ததற்கான சான்றிதழை பெற்றுள்ள மயங்க் யாதவ், அடுத்ததாக லக்னோ அணியின் பிசியோ மற்றும் நிர்வாகிகளிடம் இருந்து விளையாட ஒப்புதல் பெற வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மயங்க் யாதவ் 5 முறை காயமடைந்திருப்பதால், லக்னோ அணி நிர்வாகம் அவரை கொஞ்சம் கவனமாகவே பவுலிங் செய்ய கொண்டு வரும் என்று பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜஸ்டின் லாங்கர் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் இருப்பதால், மயங்க் யாதவ் மீது கூடுதல் அக்கறை காட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.