சேலம்: திண்டுக்கல் அணிக்கு எதிரான போட்டியில் கோவை அணி 59 ரன்கள் விளாசி மிரட்டலான வெற்றியை பெற்றதோடு, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கும் முன்னேறியுள்ளது.
டிஎன்பிஎல் தொடரின் சேலம் மைதானத்திற்கான சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளது. இதில் பலம் வாய்ந்த அணியான கோவை - திண்டுக்கல் அணிகள் மோதின. திண்டுக்கல் அணியில் அஸ்வின், பாபா இந்திரஜித் உள்ளிட்டோரும், கோவை அணியில் சாய் சுதர்சன், ஷாரூக் கான் உள்ளிட்டோரும் இருந்ததால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது. இந்த நிலையில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன்பின்னர் களமிறங்கிய கோவை அணியின் சுரேஷ் குமார் முதல் ஓவரிலேயே 3 பவுண்டரி விளாசி அதிரடியை தொடங்கினார். இதையடுத்து ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி பறந்துகொண்டே இருந்தது. சிறப்பாக ஆடிய சுரேஷ் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து சுஜய் 31 ரன்களிலும், ராம் அரவிந்த் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த நிலையில் சாய் சுதர்சன் - முகிலேஷ் கூட்டணி களமிறங்கியது.
நிதானமாக தொடங்கிய சாய் சுதர்சன் 8 ஓவர்களுக்கு பின் அதிரடியை கையில் எடுத்தார். இவரின் அதிரடியால் 15 ஓவர்களிலேயே கோவை 150 ரன்களை கடந்தது. ஒருபக்கம் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்தத் தொடர் சாய் சுதர்சன் அடிக்கும் 4வது அரைசதம் இதுவாகும். இவருடன் ஷாரூக் கானும் இணைய, ஸ்கோர் 200 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 41 பந்துகளில் 83 ரன்கள் விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து இமாலய இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ராகுல் 1 ரன்னிலும், பாபா இந்திரஜித் 1 ரன்னிலும், கணேஷ் டக் அவுட்டிலும் வெளியேற, 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் வந்த வீரர்களும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர். இருப்பினும் சிறப்பாக ஆடிய சிவம் சிங் மட்டும் 42 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக திண்டுக்கல் அணி 19.1 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. கோவை அணி தரப்பில் கவுதம் 3 விக்கெட்டுகளையும், மணிமாறன் மற்றும் ஷாரூக் கான் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் கோவை அணி 8 புள்ளிகளை எடுத்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.