TNPL 2019: சேப்பாக்கத்தை வச்சு செஞ்ச மதுரை பேந்தர்ஸ்..! 33 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயம்
திண்டுக்கல்: டிஎன்பிஎல் கிரிக்கெட்டில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையேயான 21வது லீக் ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக அருண் கார்த்திக் மற்றும் சரத்ராஜ் களமிறங்கினர்.
அதில் சரத்ராஜ் 18 ரன்னில் வெளியேறினார். ஷிஜித் சந்திரன், அருண் கார்த்திக் உடன் கை கோர்க்க ஸ்கோர் உயர்ந்தது. ஷிஜித் சந்திரன் மற்றும் அருண் கார்த்திக் தலா 39 ரன்களில் ஆட்டமிழந்தனர். அபிஷேக் தன்வார் 1 ரன்னிலும், கவுசிக் 7 ரன்னிலும் அவுட்டாகினர். அதிரடி காட்டிய நிலேஷ் சுப்பிரமணியன் 31 ரன்னிலும், மிதுன் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

பெரியசாமி 2 விக்.
இறுதியில் மதுரை பாந்தர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஹரிஷ்குமார் மற்றும் பெரியசாமி 2 விக்கெட்டுகளும், டி.ராகுல், அஸ்வின், அலெக்சாண்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்தடுத்து விக்.
இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடக்க வீரர்கள் கங்கா ஸ்ரீதர் ராஜூ மற்றும் கோபிநாத் ஆகியோர் களமிறங்கினர். கங்கா ஸ்ரீதர் ராஜூ 6 ரன்னிலும், அடுத்து வந்த கவுசிக் காந்தி 6 ரன்னிலும், ஆரிப் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

சரிவில் இருந்து மீட்பு
பின்னர் ஜோடி சேர்ந்த கோபிநாத் மற்றும் சசிதேவ் பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். கோபிநாத் 45 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் அஸ்வின் 4 ரன்னிலும், பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த சசிதேவ் 51 ரன்களில் வெளியேறினர்.

33 ரன்களில் வெற்றி
சித்தார்த் ரன் எதுவும் எடுக்காமலும், ஹரிஷ்குமார் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.


Click it and Unblock the Notifications