ஓஸ்லோ : நார்வே செஸ் சூப்பர் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சன் (Magnus Carlsen) 7வது முறையாக வென்றுள்ளார். இந்திய கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் (D. Gukesh) மூன்றாவது இடத்தைப் பிடித்து இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். நார்வே செஸ் தொடரின் இறுதிச் சுற்றில், இந்தியாவின் டி. குகேஷ், ஃபாபியானோ கருவானாவை (Fabiano Caruana) எதிர்த்து விளையாடினார். இதில் குகேஷ் நேரம் அழுத்தம் காரணமாக ஒரு முக்கியமான தவறைச் செய்து, தோல்வியைத் தழுவினார்.
இந்தத் தோல்வி குகேஷ் முதல் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பைப் பறித்தது. அவர் மொத்தமாக 14.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். கருவானா 15.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். கார்ல்சன் 16 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

முன்னதாக, குகேஷ் கார்ல்சனை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவரே இந்த முறை நார்வே செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குகேஷ் உலக சாம்பியனாக இருக்கும் நிலையில் கார்ல்சனை முந்தி நார்வே செஸ் பட்டத்தையும் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால். அது நடக்காதது இந்திய செஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மகளிர் பிரிவில், உக்ரைனைச் சேர்ந்த அன்னா முசிச்சுக் (Anna Muzychuk) 16.5 புள்ளிகளுடன் பட்டத்தை வென்றார். இறுதிச் சுற்றில் அவர் இந்திய வீராங்கனை ஆர். வைஷாலியிடம் (R. Vaishali) ஆர்மெகட்டான் டை-பிரேக்கில் தோற்றபோதிலும், சாம்பியன் பட்டத்தை வென்றார். வைஷாலி 11 புள்ளிகளுடன் தொடரை முடித்தார்.
இந்தத் தொடரில், கிளாசிக்கல் விளையாட்டில் வெற்றி பெற்றால் 3 புள்ளிகள் வழங்கப்படும். ஒருவேளை போட்டி டிரா ஆனால், இரு வீரர்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். அதன் பின்னர் ஆர்மெகட்டான் டை-பிரேக் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவருக்கு கூடுதலாக 0.5 புள்ளிகள் வழங்கப்படும்.
மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனை கோனேரு ஹம்பி (Koneru Humpy) ஜூ வென்ஜூனுக்கு (Ju Wenjun) எதிரான கிளாசிக்கல் போட்டியை டிரா செய்து, ஆர்மெகட்டானில் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் தொடரை நிறைவு செய்தார்.