13 பந்தில் 5 சிக்ஸ், 2 ஃபோர்.. அரண்டு போன பெங்களூரு.. ஆர்சிபி வீரரின் வெறித்தனமான ஆட்டம்
பெங்களூர்: 2024 மகாராஜா டிராஃபி டி20 தொடர் கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மைசூர் வாரியர்ஸ் மற்றும் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மைசூர் வாரியர்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் மனோஜ் பண்டாகே. அவர் 13 பந்துகளில் 44 ரன்கள் குவித்து பெங்களூரு அணியை மிரள வைத்தார்.
இந்தப் போட்டியில் மைசூர் வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியை சேர்ந்த எஸ்யூ கார்த்திக் 44 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்தார். அவர் ஏழு ஃபோர் மற்றும் மூன்று சிக்ஸ் அடித்து இருந்தார். கேப்டன் கருண் நாயர் 45 பந்துகளில் 66 ரன்கள் குவித்திருந்தார். அவர் ஆறு ஃபோர் மற்றும் மூன்று சிக்ஸ் அடித்து இருந்தார். மைசூர் அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

மைசூர் அணி அதிகபட்சம் 180 ரன்கள் வரை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மனோஜ் பண்டாகே கடைசி ஐந்து ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து பெங்களூரு அணியை அரண்டு போக வைத்தார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று இருக்கும் இவர் இதுவரை ஒரு ஐபிஎல் போட்டியில் கூட ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் இறுதிப் போட்டியில் தான் சந்தித்த 13 பந்துகளில் ஐந்து சிக்ஸ் மற்றும் இரண்டு ஃபோர் அடித்தார். மொத்தம் 44 ரன்கள் சேர்த்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 338 ஆக இருந்தது. இதை அடுத்து மைசூர் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.
பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் சந்தோக் சிங் நான்கு ஓவர்களில் 51 ரன்கள் விட்டுக் கொடுத்து பரிதாபமாக காட்சியளித்தார். அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. கிராந்தி குமார் மட்டுமே சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். பெங்களூரு அணியின் மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஒரு ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்து இருந்தனர்.
அடுத்து 208 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி சேஸிங் செய்யத் தொடங்கியது. அந்த அணியின் துவக்க வீரர் சேத்தன் 32 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். மற்ற டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வரிசையாக ஆட்டம் இழந்தனர்.
பின்வரிசை வீரர்கள் அனிருத்தா ஜோஷி 18 ரன்கள், கிராந்தி குமார் 39 ரன்கள், நவீன் 17 ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்த இறுதிப் போட்டியில் மைசூர் வாரியர்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. மைசூர் வாரியர்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசி இருந்த வித்யாதர் பாட்டில் நான்கு ஓவர்களில் 19 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். கிருஷ்ணப்பா கௌதம் நான்கு ஓவர்களில் 23 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.


Click it and Unblock the Notifications