இந்திய அணிக்கு அடித்த லக்.. முக்கிய இலங்கை வீரர் காயம்.. ஆசிய கோப்பை ஃபைனலில் நீக்கம்?
கொழும்பு : இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்த நிலையில், இலங்கை அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளர் மகீஷ் தீக்ஷனா காயம் அடைந்துள்ளார்.

அவரது காயம் குறித்து மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன. அவர் அந்த அணியின் முக்கியமான சுழற் பந்துவீச்சாளர் என்பதால் அவரை உலகக்கோப்பை தொடருக்கு தயார் செய்யும் வகையில் காயம் குணமாகும் வரை அவருக்கு ஓய்வளிக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்த தகவல் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. நடப்பு ஆசிய கோப்பை தொடரிலும் அவர் கட்டுகோப்பாக பந்து வீசி இருக்கிறார். ஏற்கனவே, இலங்கை அணியில் பல வீரர்கள் ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக காய்த்தால் வெளியேறினர். தற்போது அவர்கள் நிலை இன்னும் மோசமாகி இருக்கிறது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தான் தீக்ஷனாவிற்கு காயம் ஏற்பட்டது. அவர் பீல்டிங் செய்த போது வலது காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. அதனால் அவர் மைதானத்தில் இருந்து சில ஓவர்கள் வெளியேறினார். பின் 35வது ஓவரின் போது மீண்டும் களத்திற்கு வந்து மூன்று ஓவர்கள் பந்து வீசினார்.
ஆனால், அவரது காயம் மோசமடையவே 39வது ஓவர் முடிவில் அவரை கைத்தாங்கலாக மைதானத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றனர். அதன் பின் அவர் திரும்பவில்லை.

தற்போது இலங்கை கிரிக்கெட் போர்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தீக்ஷனாவிற்கு வலது காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், நாளை அவருக்கு முழு ஸ்கேன் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை தொடரில் அவர் தனது கடைசி இரண்டு போட்டிகளில் 2 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். ஓவருக்கு 5 ரன்களுக்கும் குறைவாகவே கொடுத்திருக்கிறார். இலங்கை அணிக்காக இதுவரை 15 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ள அவர் 31 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அவரது பந்துவீச்சு சராசரி 17.45 மட்டுமே. சிறப்பான பங்களிப்பை அளித்து முக்கியமான வீரராக இருப்பதால் தீக்ஷனா தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு விரைவில் உலகக்கோப்பை அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications