டெல்லி: வங்கதேச அணியின் மூத்த வீரர் மஹ்மதுல்லா ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியில் அவர் இடம் பெற்று இருக்கிறார். வங்கதேச அணி தற்போது இந்தியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் அவர் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இந்த தொடரின் மூன்றாவது டி20 போட்டியே தனது கடைசி சர்வதேச டி20 போட்டி என அவர் அறிவித்து இருக்கிறார். அவருக்கு 38 வயது ஆகிறது. அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார்.

அதன் பின் அவர் ஒருநாள் அணி மற்றும் டி20 அணிகளில் மற்றும் இடம் பெற்று வந்தார். இடையே அவர் ஃபார்ம் இழந்தார். அதனால் 2022 முதல் 2023 வரை 27 போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. பின்னர் 2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வாய்ப்பு பெற்று, இலங்கை அணிக்கு எதிராக 54 ரன்கள் அடித்து அணியில் தனது இடத்தை உறுதி செய்தார்.
2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான வங்கதேச அணியில் இடம் பெற்று ஆடினார். ஆனால், பெரிதாக ரன் குவிக்கவில்லை. எனினும், தொடர்ந்து அணியில் நீடித்த அவர் இந்திய சுற்றுப்பயணத்திலும் இடம் பிடித்தார். ஆனால், இதுவே தனது கடைசி டி20 தொடர் என்ற முடிவை எடுத்தே இந்தியாவுக்கு வந்ததாக குறிப்பிட்டார்.
இனி 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக தன்னை தயார் செய்ய உள்ளதாகவும், அதனால் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்து இருக்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பை வர உள்ளது. அதில் அவரால் பங்கேற்க முடியாது என்பதால் இளம் வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெற்றுள்ளார்.
மஹ்மதுல்லா 139 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 2395 ரன்கள் எடுத்துள்ளார். வங்கதேச டி20 அணியின் கேப்டன் ஆகவும் செயல்பட்டு இருக்கிறார். தற்போது அவர் அதிக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய நான்காவது வீரர் என்ற பெருமையுடன் ஓய்வு பெற இருக்கிறார். மேலும், வங்கதேச அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
ஷகிப் அல் ஹசன் முதல் இடத்தில் இருக்கிறார். ஷகிப் 2024 டி20 உலக கோப்பையுடன் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கதேச அணியின் இரண்டு மூத்த வீரர்கள் அடுத்தடுத்து டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருப்பது அந்த அணியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.