தாகா: வங்கதேச கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மக்முதுல்லா ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்து இருக்கிறார். வங்கதேச அணியின் நான்கு மூத்த வீரர்களில் ஒருவரான இவர் ஓய்வை அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு சோகத்தை அளித்துள்ளது.
வங்கதேச கிரிக்கெட் ஜாம்பவான்களான தமிம் இக்பால், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் மற்றும் மக்முதுல்லா ஆகிய நால்வரும் இணைந்து நூற்றுக்கணக்கான சர்வதேச போட்டிகளில் ஒன்றாக விளையாடி உள்ளனர். வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு இவர்கள் மீது மிகப்பெரிய மதிப்பு இருந்தது.

முன்னதாக, தமிம் இக்பால், ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தனர். தற்போது நான்காவதாக மக்முதுல்லாவும் ஓய்வை அறிவித்து இருக்கிறார். 39 வயதான நிலையில் மக்முதுல்லா 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணியில் இடம் பெற்று விளையாடினார்.
அந்த அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து வெளியேறியது. இதை அடுத்து மக்முதுல்லா ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். முன்னதாக 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 2024 ஆம் ஆண்டில் டி20 போட்டிகளில் இருந்தும் மக்முதுல்லா ஓய்வு அறிவித்து இருந்தார்.
தனக்கு 39 வயதாகும் நிலையில் இனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்திருக்கிறார். அவர் வங்கதேச அணிக்காக 430 சர்வதேச போட்டிகளில் 11,047 ரன்களும், 166 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். அந்த அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். 9 சர்வதேச சதங்களை அடித்து இருக்கிறார்.
மக்முதுல்லா 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2914 ரன்களும், 43 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார். 239 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5689 ரன்கள் மற்றும் 82 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 141 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 2444 ரன்கள் மற்றும் 41 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
தனது ஓய்வு பற்றி பற்றி மக்முதுல்லா வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறேன். எல்லாம் கச்சிதமாக முடியாது, சில சமயம் நாம் நமக்கு முன் இருக்கும் கேள்விக்கு ஆம் என்று விடை அளித்து அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட வேண்டும். கடவுளுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கதேச அணியின் நான்கு மூத்த வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்ததால் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். அந்த அணி தற்போது அடுத்த தலைமுறையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. அதனால் மூத்த வீரர்கள் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி உள்ளனர்.