சான் பிரான்சிஸ்கோ: இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறுவது போல, அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) என்னும் டி20 தொடர் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2025 ஆம் ஆண்டுக்கான சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியிலேயே நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன், டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தி மிரள வைத்தார்.
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் (San Francisco Unicorns) மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் (Washington Freedom) அணிகள் மோதின. இதில் சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஃபின் ஆலன், ரசிகர்களுக்கு கண்கவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் வெறும் 51 பந்துகளில் 151 ரன்கள் குவித்து எதிரணி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். குறிப்பாக, 49 பந்துகளில் 150 ரன்களை எட்டி, டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக 150 ரன்கள் என்ற சாதனையை அவர் படைத்தார். தனது இன்னிங்ஸில் வெறும் ஐந்து பவுண்டரிகளை மட்டுமே அடித்து இருந்த அவர், மொத்தமாக 19 சிக்ஸர்களை விளாசி இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 296.08 என்பதாக இருந்தது.
இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பிரம்மாண்டமான சாதனையை அவர் செய்தார். இதற்கு முன்பு, கிறிஸ் கெயில் மற்றும் எஸ்தோனியாவைச் சேர்ந்த சாகில் சவ்கான் ஆகியோர் தங்களது இன்னிங்ஸ்களில் 18 சிக்ஸர்களை அடித்து இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது ஆலன், அவர்களின் சாதனையை முறியடித்து, புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இதே ஃபின் ஆலன், பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போது நியூசிலாந்து அணிக்காக 62 பந்துகளில் 137 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது அவர் 16 சிக்ஸர்களை அடித்து அதிக சிக்ஸர்களை அடித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது சாதனையை அவர் இன்னும் உயர்த்திக் கொண்டிருக்கிறார்.
இந்த போட்டியில் ஆலனின் அதிரடி ஆட்டத்தால், சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் என்ற மிகப் பெரிய ஸ்கோரை எடுத்தது. இந்த ஸ்கோர் மேஜர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அடுத்து ஆடிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணி, அதிரடியாக விளையாட முயன்றாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அந்த அணியின் மிட்செல் ஓவன் 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா 17 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தும், ஜாக் எட்வர்ட்ஸ் 7 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததால், வாஷிங்டன் ஃப்ரீடம் அணி படுதோல்வி அடைந்தது. ஃபின் ஆலனின் இந்த அதிரடி ஆட்டம், மேஜர் லீக் கிரிக்கெட் தொடருக்கு ஒரு உற்சாகமான தொடக்கத்தை அளித்துள்ளது.