பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஊடுருவிய நபர்கள்.. பாதுகாப்பு தோல்வி! 240 சிசிடிவி கேமரா இணைப்பு கட்
பெங்களூருவின் புகழ்பெற்ற எம். சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில், ஐபிஎல் போட்டியின் போது பாதுகாப்பு வளையத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் பெரும் சதிவேலை அரங்கேறியுள்ளது. மைதானத்தின் முக்கிய பாதுகாப்பு அம்சமான சிசிடிவி கேமராக்களின் கேபிள்கள் திட்டமிட்டு துண்டிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 24-ம் தேதி சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக அன்று காலை, தொழில்நுட்பக் குழுவினர் கேமராக்களை ஆய்வு செய்தபோது, சுமார் 240-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் திடீரென 'ஆஃப்லைன்' ஆனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஊடுருவிய மர்ம நபர்கள்
இது குறித்த தீவிர விசாரணையில், 'ஐவிஎஸ் டிஜிட்டல் சொல்யூஷன்ஸ்' (IVS Digital Solutions) என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த மஞ்சுநாத் இ. மற்றும் அப்துல் கலாம் ஆகிய இருவரும் இந்த நாசவேலையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடம் மைதானத்திற்குள் நுழைய முறையான அனுமதிச் சீட்டுகள் (Pass) இல்லை. இருப்பினும், காலாவதியான பழைய அடையாள அட்டையைப் பயன்படுத்தி காலை 11:30 மணியளவில் சட்டவிரோதமாக மைதானத்திற்குள் நுழைந்துள்ளனர்.
துண்டிக்கப்பட்ட பாதுகாப்பு வளையம்
மைதானத்தின் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியான சிசிடிவி கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைந்த இவர்கள், அங்கிருந்த என்விஆர் (NVR) மற்றும் ஆப்டிகல் ஃபைபர் இணைப்புகளைக் கத்தரித்துச் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் நுழைவு வாயில்கள், மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கார்ப்பரேட் ஸ்டாண்ட் உள்ளிட்ட மிக முக்கியமான இடங்களில் இருந்த கேமராக்கள் செயலிழந்தன. இதன் காரணமாக, போட்டியின் போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினருக்குத் தேவையான நேரடி வீடியோ பதிவுகளை (Live Feed) வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
காவல்துறை நடவடிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக 'Staqu Technologies' நிறுவனத்தைச் சேர்ந்த ஆதித்யா பட் அளித்த புகாரின் பேரில், கப்பன் பார்க் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிஎன்எஸ் (BNS) பிரிவு 324(4)-ன் கீழ் (தீய நோக்குடன் சேதம் விளைவித்தல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் போன்ற பெரும் கூட்டங்கள் கூடும் நிகழ்வின் போது இத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது பெங்களூரு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications