பெங்களூரு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி வந்துள்ள நிலையில் இந்திய வீரர்களின் உடல் தகுதி குறித்து தற்போது அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்திய அணி தங்களது முதல் போட்டியில் வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி பலம் வாய்ந்த பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்தத் தொடருக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டாலும் இந்திய அணியில் சில பிரச்சனைகள் இருப்பதாக கருதப்பட்டது. காயத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் முழுமையாக குணமடைந்து பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார்.

ஆனால் கே எல் ராகுல் அறுவை சிகிச்சை செய்து கொண்டு முழு உடல் தகுதியை எட்டிய பிறகு மீண்டும் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இந்திய அணியின் திட்டங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. ஏனென்றால் கே எல் ராகுலை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பயன்படுத்த அணி நிர்வாகம் முடிவெடுத்தது. இதற்காக அவர் தீவிர பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பின் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் அவருக்கு பதில் யாரை அணியில் சேர்ப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் யோயோ டெஸ்ட் உள்ளிட்ட பல சோதனைகளின் அடிப்படையில் கே எல் ராகுலைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் முழு உடல் தகுதியை எட்டி விட்டார்கள். ஆனால் ராகுலுக்கு காயத்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் வழிகாட்டத்தில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
எனினும் பயிற்சி முகாமில் நேற்று ராகுல் பங்கேற்று மீண்டும் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கே எல் ராகுல் பேட்டிங் செய்யும்போது சூரியகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அவருக்கு சில நுணுக்கங்களையும் அறிவுரைகளையும் வழங்கினார்கள். இதனால் ராகுல் 100% உடல் தகுதியை மீண்டும் எட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடுவார் என தெரிகிறது.