செபரமடு லசித் மலிங்கா..!! சிலிங்க மாலிங்க..!! இனிமே இப்படி ஒருத்தர் கிடைப்பாரா..? சாதனைத் துளிகள்
கொழும்பு: உலக கோப்பையில் 2 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த வீரர் உள்ளிட்ட பல சாதனைகளை படைத்துள்ளார் ஓய்வு பெற்ற இலங்கையின் நட்சத்திர பவுலர் மலிங்கா.
யாக்கர் மன்னன் என்று அழைக்கப்படும் இலங்கையின் பந்துவீச்சாளர் லஷித் மலிங்கா 2004ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். இதுவரை 226 போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.
2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நிகழ்த்திய சாதனைகளை காணலாம்.

தொடர்ச்சியாக 4 விக்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் எடுத்த ஒரே பந்துவீச்சாளர் லசித் மலிங்கா. 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இதனை நிகழ்த்தினார்.

3 முறை ஹாட்ரிக்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த ஒரே பந்துவீச்சாளர் லசித் மலிங்கா. 2007-ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, 2011ஆம் ஆண்டு கென்யா அணிக்கு எதிராக மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2 முறை ஹாட்ரிக்
உலக கோப்பையில் 2 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த வீரர் மலிங்கா மட்டுமே. 2007ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக இந்த சாதனையை படைத்தார். 2011ம் ஆண்டு உலக கோப்பையில் கென்யா அணிக்கு எதிராகவும் இதே சாதனையை படைத்தார்.

338 விக். 9வது இடம்
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 338 விக்கெட்டுகளுடன் 9வது இடத்தில் உள்ளார் மலிங்கா. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 3வது இலங்கை வீரர் ஆவார்.

8 முறை சாதனை
ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை ஓர் ஆட்டத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் வரிசையில் 5வது இடத்தில் மலிங்கா உள்ளார். அந்த சாதனையை 8 முறை அவர் நிகழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகள் அரங்கில் மலிங்கா 11 முறை நான்கு விக்கெட்டுகள் எடுத்தார்.


Click it and Unblock the Notifications