"தேர்தல் சீட்டுக்கு 5 கோடி கேட்டாங்க" மம்தா கட்சி மீது முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி புகார்
கொல்கத்தா: மேற்கு வங்க அரசியலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசின் வீழ்ச்சிக்குக் காரணம் ஊழல் தான் என்று அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான மனோஜ் திவாரி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக, தேர்தலில் போட்டியிட தன்னிடம் 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணிக்காக விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, மம்தா பானர்ஜி அமைச்சரவையில் விளையாட்டுத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தவர். நடந்து முடிந்த 2026 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், 15 ஆண்டுகால மம்தா பானர்ஜியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் தோல்விக்குப் பிறகு மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். ஹவுரா மாவட்டத்தின் ஷிப்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய ஊழல் இருப்பதாக அவர் தற்போது உடைத்துப் பேசியுள்ளார்.

இது குறித்து மனோஜ் திவாரி கூறுகையில், "திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முழுவதும் ஊழலில் மூழ்கியுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட சீட் வேண்டும் என்றால் 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தன்னிடம் கேட்கப்பட்டது. நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் தான் எனக்கு சீட் கொடுக்கவில்லை. என்னிடம் மட்டுமல்ல, சுமார் 70 முதல் 72 வேட்பாளர்கள் தலா 5 கோடி ரூபாய் கொடுத்து தான் இந்த முறை சீட் வாங்கியுள்ளனர். பணத்தை வாரி இறைத்தவர்களுக்கு மட்டுமே மம்தா கட்சி வாய்ப்பளித்தது" என அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலிலேயே மம்தா தன்னை போட்டியிட அழைத்ததாகவும், ஆனால் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததால் அப்போது தான் மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். பின்னர் 2021-ல் ஷிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களின் நலனுக்காகவும், விளையாட்டில் மாற்றங்களைக் கொண்டு வரவும் அரசியலுக்கு வந்த தனக்கு, இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகள் மிகுந்த வேதனையை அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி எதிர்பார்க்கப்பட்டது தான் என்று கூறிய திவாரி, எந்தத் துறையிலும் வளர்ச்சி இல்லை, வெறும் ஊழல் மட்டுமே மிஞ்சியிருக்கிறது என்று சாடியுள்ளார். ஏற்கனவே மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சரே தனது சொந்தக் கட்சி மீது இப்படிப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்குயுள்ளது மம்தா பானர்ஜிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் இப்போது தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications
