“கோலி எதையோ சொல்லிட்டே தான் இருப்பார்” அம்பயரின் முடிவு மிகச்சிறப்பு.. மார்க் வாக் பேச்சால் சர்ச்சை
டெல்லி: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு அவுட் கொடுத்தது தான் சரியான முடிவு என முன்னாள் வீரர் மார்க் வாக் கூறியுள்ளதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 262 ரன்களை குவித்தது.
இதன் பின்னர் ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த போதும் இறுதியில் 262 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இதனால் முதல் இன்னிங்ஸில் ஒரே ஒரு ரன் மட்டும் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.

சர்ச்சை முடிவு
இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியதற்கு முக்கிய காரணம் அம்பயரின் தவறான முடிவு அமைந்தது. சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 44 ரன்கள் அடித்திருந்த போது மேத்யூவ் குஹ்னெமேன் வீசிய பந்தை ஸ்ட்ரோக் வைக்க முயன்றார். அப்போது அந்த பந்து கோலியின் பேடிற்கும், பேட்டிற்கும் இடையே ஒரே நேரத்தில் பட்டது. அதற்கு கள நடுவரும் அவுட் என காட்ட, 3வது நடுவரும் ஆதாரம் இல்லை எனக்கூறி அவுட் கொடுத்துவிட்டார்.

ஐசிசி விதிமுறை
பந்து முதலில் விராட் கோலியின் பேட்டில் தான் பட்டது என ரசிகர்கள் ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். மற்றொரு புறம் ஒரு பந்தானது பேட்ஸ்மேனின் பேடிலும் - பேட்டிலும் ஒரே நேரத்தில் பட்டால், அதனை பேட்டில் தான் முதலில் பட்டதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என ஐசிசியின் க்ளாஸ் 36.2.2 விதிமுறை கூறுகிறது. ஆனால் இது இன்று மீறப்பட்டுள்ளது.

மார்க் வாக் ஆதரவு
இந்நிலையில் அம்பயர்களுக்கு மார்க் வாக் ஆதரவுக் கொடுத்துள்ளார். அதில், இன்று தான் சரியான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். பேட்டில் தான் அடித்தேன் என விராட் கோலி கூறுவார், ஆனால் அதனை ஏற்க கூடாது. அம்பயர்களை பாராட்ட வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளில் 10ல் ஒருமுறை பேட்ஸ்மேனுக்கு சாதகமாக தான் முடிவு வரும். ஆனால் இது போன்ற களங்களில் பவுலர்கள் அழுத்தங்களை கொடுப்பதற்கு இன்று தான் பலன் கிடைத்துள்ளது.

விதிக்கு உட்பட்டது தான்
அம்பயரின் முடிவால் விராட் கோலிக்கு கஷ்டமாக தான் இருக்கும். ஆனால் இது 50 - 50 முடிவாக தான் அமைந்தது. பந்து பேடில் தான் பட்டது என வாக்குவாதம் செய்யலாம். ஆனால் பால் டிராக்கிங்கில் தெளிவாக காட்டப்பட்டுவிட்டது. எனவே ஐசிசி விதிகளின் படி அம்பயரின் முடிவு தான் சரியாக உள்ளது என மார்க் வாக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications