RSA vs AUS: தலையை பிடித்துக் கொண்டுபோன க்ரீன்.. மாற்று வீரராக வந்த லபுஷேன்.. மொத்தமாக மாறிய முடிவு!
டர்பன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கம்கஷன் சப்ஸ்ட்டியூடாக வந்த லபுஷேன் ஆட்டத்தின் முடிவை மாற்றும் அளவிற்கான இன்னிங்ஸை விளையாடியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2019ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பதில் கன்கஷன் சப்ஸ்டிட்யூட் வீரராக களமிறங்கி அரைசதம் அடித்து அசத்தியவர் லபுஷேன். அன்றைய நாள் முதல் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக லபுஷேன் மாறினார். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் நம்பர் 3 வீரராகவே லபுஷேன் மாறிப் போனார். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தும் அசத்தினார்.

தற்போது மீண்டும் கன்கஷன் சப்ஸ்டிட்யூட் வீரராக களமிறங்கிய லபுஷேன், ஆட்டத்தை மாற்றும் இன்னிங்ஸ் ஒன்றை விளையாடியுள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் பவுமாவின் அபாரமான சதத்தால் 49 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
அப்போது 5.1வது ஓவரில் மிட்செல் மார்ஷ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் கேமரூன் க்ரீன் களமிறங்கிய போது, எதிர்கொண்ட 2வது பந்திலேயே தலையில் பந்து பட்டுச் சென்றது. இதனால் காயமடைந்த கேமரூன் க்ரீன், உடனடியாக களத்தில் இருந்து வெளியேறினார். இதன் காரணமாக கன்கஷன் சப்ஸ்டிட்யூட் களமிறங்கும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் 72 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின் கேமரூன் க்ரீனுக்கு மாற்றாக லபுஷேன் களமிறங்கினார். சிறப்பாக ஆடிய அவர், எதிர்முனையில் ஆல் ரவுண்டரான ஆஷ்டன் அகரை வைத்துக் கொண்டு அரைசதம் கடந்தார். ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த போதும், தனியொரு வீரராக லபுஷேன் போராடி வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இறுதிவரை களத்தில் இருந்த லபுஷேன் 93 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் தென்னாப்பிரிக்கா மண்ணில் 12 ஆண்டுகளுக்கு பின் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றுள்ளது. உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் லபுஷேன் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அனைத்து வீரர்களும் ஏமாற்றிய நிலையில் தனியொரு வீரராக ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். இதனால் லபுஷேனை ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்ய முன்வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications